புஷ்கர விழாவை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் சிறப்பு ஆரத்தி ஜான் பாண்டியன் பங்கேற்பு


புஷ்கர விழாவை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் சிறப்பு ஆரத்தி ஜான் பாண்டியன் பங்கேற்பு
x
தினத்தந்தி 15 Sept 2018 3:00 AM IST (Updated: 15 Sept 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

புஷ்கர விழாவை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் நேற்று சிறப்பு ஆரத்தி நடந்தது. இதில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியன் பங்கேற்றார்.

நெல்லை, 

புஷ்கர விழாவை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் நேற்று சிறப்பு ஆரத்தி நடந்தது. இதில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியன் பங்கேற்றார்.

தாமிரபரணி புஷ்கர விழா

தாமிரபரணி புஷ்கர விழா வருகிற அக்டோபர் மாதம் 11-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி தாமிரபரணி ஆற்றில் சிறப்பு பூஜைகள் நடத்துவதற்கும், புனித நீராடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக கவர்னர் மற்றும் அமைச்சர்கள், மத்திய மந்திரிகள், துறவிகள் உள்பட இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி தாமிரபரணி ஆற்றில் உள்ள படித்துறைகள் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்தநிலையில் தாமிரபரணி புஷ்கர விழா சிறப்பாக நடைபெறவேண்டி நெல்லை சந்திப்பு தைப்பூச மண்டபம் அருகே தாமிரபரணி ஆற்றில் உள்ள படித்துறையில் நேற்று சிறப்பு ஆரத்தி விழா நடந்தது. இதில் துறவிகள் சங்க செயலாளர் ராமானந்தா சுவாமிகள், செண்பக மன்னார் ஜீயர், நாராயண ஜீயர், வேதானந்த மகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு தாமிரபரணி நதிக்கு பால், தேன், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை செய்து ஆரத்தி காட்டினார்கள்.

இந்த ஆரத்தி விழாவில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான் பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தாமிரபரணி நதிக்கு ஆரத்தி காட்டினார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு விழாவாக...

தாமிரபரணி புஷ்கர விழாவிற்கு இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வர உள்ளனர். எனவே இந்த புஷ்கர விழாவுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசு செய்து கொடுக்கவேண்டும். இது சாதி, மதம், மொழி பார்த்து நடக்கும் விழா இல்லை. இந்த விழா நமது தாமிரபரணிக்கு நடக்கிற விழா. எனவே இந்த விழாவை அனைத்து தரப்பு மக்களும் கொண்டாட வேண்டும். இந்த விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். புஷ்கர விழாவுக்கு வருகிறவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக மாநில துணை பொதுச்செயலாளர் நெல்லையப்பன், செய்தி தொடர்பாளர் சண்முக சுதாகர், நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் கண்மணிமாவீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story