நெல்லையில் 200 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு அமைச்சர் ராஜலட்சுமி நடத்தி வைத்தார்


நெல்லையில் 200 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு அமைச்சர் ராஜலட்சுமி நடத்தி வைத்தார்
x
தினத்தந்தி 14 Sep 2018 10:00 PM GMT (Updated: 14 Sep 2018 7:54 PM GMT)

நெல்லையில் 200 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழாவை, அமைச்சர் ராஜலட்சுமி நடத்தி வைத்தார்.

நெல்லை, 

நெல்லையில் 200 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழாவை, அமைச்சர் ராஜலட்சுமி நடத்தி வைத்தார்.

கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு 

தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் செயல்படக்கூடிய ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் 200 கர்ப்பிணிகளுக்கு நெல்லை சந்திப்பு உடையார்பட்டி வானவில் மண்டபத்தில் நேற்று வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

நெல்லை உதவி கலெக்டர் மைதிலி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி முன்னிலை வகித்தார். அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு, சந்தனம் பூசி, வளையல் அணிவித்து வளைகாப்பை நடத்தி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

குழந்தைகள் பராமரிப்பு 

கர்ப்பிணிகள் பேறுகால நேரத்தில் என்னென்ன உணவு சாப்பிடவேண்டும், எப்போது தடுப்பூசி போட வேண்டும் என்று டாக்டர்கள் கூறுகின்ற ஆலோசனைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். குழந்தைகள் பிறந்த பிறகு குழந்தைகளுக்கு தாய்ப்பால் முக்கியம், தாய்ப்பாலுக்கு தான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இதுபற்றி விழிப்புணர்வு தேவையாகும். குழந்தைகள் பராமரிப்பு மற்றும் உணவு ஊட்டும் முறைகள் குறித்தும் தெரிந்து இருக்கவேண்டும்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த 2013–ம் ஆண்டு முதல் 2017–ம் ஆண்டு வரை 18 ஆயிரத்து 150 கர்ப்பிணிகளுக்கு 66 இடங்களில் வைத்து வளைகாப்பு நடத்தப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு இதுவரை 3 ஆயிரத்து 630 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் பங்கேற்ற கர்ப்பிணிகளுக்கு கையேடு, சேலை, பூ, பழங்கள் உள்ளிட்ட வளைகாப்பு நிகழ்ச்சியில் தாய் வீட்டில் இருந்து வழங்கக்கூடிய அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

விழாவில் நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா, அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், அவை தலைவர் பரணி சங்கரலிங்கம், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கண்ணன், பல்லிக்கோட்டை செல்லத்துரை, சிறுபான்மை பிரிவு செயலாளர் மகபூப்ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி ஜெயசூர்யா நன்றி கூறினார். 


Next Story