ஆக்கிரமிப்புகள், ஆகாயதாமரைகள் நிறைந்த ராஜகீழ்ப்பாக்கம் ஏரி தூர்வார பொதுமக்கள் கோரிக்கை


ஆக்கிரமிப்புகள், ஆகாயதாமரைகள் நிறைந்த ராஜகீழ்ப்பாக்கம் ஏரி தூர்வார பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 14 Sep 2018 10:15 PM GMT (Updated: 14 Sep 2018 7:57 PM GMT)

ராஜகீழ்ப்பாக்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகள், ஆகாய தாமரைகளை அகற்றி ஏரியை தூர்வாரி நீர் ஆதார ஏரியாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாம்பரம், 

சென்னையை அடுத்த சேலையூர் அருகே செம்பாக்கம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ராஜகீழ்ப்பாக்கம் ஏரி உள்ளது. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி, 105 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். ஆனால் நாளடைவில் ஆக்கிரமிப்புகளின் பிடியில் சிக்கி, தற்போது 10 ஏக்கருக்கும் குறைவாக காட்சி அளிக்கிறது.

செம்பாக்கம் நகராட்சியின் 8, 9, 10 ஆகிய மூன்று வார்டுகளில் உள்ள சில பகுதிகள், ராஜகீழ்ப்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு பகுதியில்தான் அமைந்து உள்ளன.

கிழக்கு புறவழிச்சாலை அமைப்பதற்காக இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், இதுவரையிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.

ஆகாயதாமரைகள்

கடந்த ஆண்டுகளில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது ராஜகீழ்ப்பாக்கம் ஏரிநீர் வீணாக வெளியேறியதால், அதன்பிறகு கரைகள் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் மட்டும் அகற்றப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டது.

ஏரியின் உள்ளே உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற துரித நடவடிக்கை எடுத்த வருவாய்த்துறையினர், அதன்பிறகு ஆக்கிரமிப்பாளர்களை கண்டுகொள்ளவில்லை. ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று வீடுகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

கணக்கெடுப்பு பணிகளும் முடிந்து ஆக்கிரமிப்புகள் அகற்ற இறுதி எச்சரிக்கை நோட்டீசும் வழங்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஏரியில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டு தற்போது ஏரி முழுவதும் ஆக்கிரமிப்பு வீடுகளும், ஆகாயதாமரை செடிகளும் நிறைந்து உள்ளன. ஏரியில் கழிவுநீர் மட்டுமே உள்ளது.

ராஜகீழ்ப்பாக்கம் பகுதி மக்களின் நிலத்தடிநீர் ஆதாரமாக உள்ள இந்த ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது வேதனைக்குரியது என பொதுமக்கள் தெரிவித்தனர். உடனடியாக ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் ஆகாயதாமரை செடிகளை அகற்றி ஏரியை தூர்வாரி நீர் ஆதார ஏரியாக மாற்றவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல ஆண்டுகளாக இருந்து வரும் பொதுமக்களின் இந்த கோரிக்கையானது, கிழக்கு புறவழிச்சாலை பணியால் நிறைவேறுமா? என்றும் எதிர்பார்க்கின்றனர்.

சாலை பணிகள்

இந்தநிலையில் சென்னை பெருங்களத்தூரில் இருந்து மப்பேடு, நெடுங்குன்றம், திருவஞ்சேரி, சேலையூர் வழியாக ராஜகீழ்ப்பாக்கம் ஏரியின் நடுவில் வரும் தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை பணிகள் 2014-ம் ஆண்டே சேலையூர் மற்றும் திருவஞ்சேரி பகுதியில் முடிந்து விட்டது.

நிலம் கையகப்படுத்தப்படும் பணியில் ஏற்பட்ட காலதாமதத்தால் மப்பேடு மற்றும் நெடுங்குன்றம் பகுதியில் சாலை பணிகள் நடைபெறவில்லை. தற்போது தமிழக அரசு இந்த பகுதியில் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சாலை பணிகளுக்கு ரூ.33 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

இந்த பகுதியில் நிலம் கையகப்படுத்தப்பட்டு பெருங்களத்தூர் வரை 45 மீட்டர் அகலத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த பணிகளை செய்துமுடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்

இந்தநிலையில் சேலையூர் வரை சாலை பணிகள் முடிந்துவிட்டநிலையில் ராஜகீழ்ப்பாக்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே சாலை பணிகள் முழுமையாக முடிவடைந்து வேளச்சேரி சாலையில் இணைக்க முடியும் என்ற நிலை உள்ளது.

ராஜகீழ்ப்பாக்கம் ஏரி பகுதியில் கிழக்கு புறவழிச்சாலை செல்லும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுபணிதுறையினரை நெடுஞ்சாலைத்துறையினர் கேட்டுக்கொண்டு உள்ளனர். ஏற்கனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறை மூலம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விட்டதால் விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற உள்ளதாக பொதுபணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பொதுபணித்துறை அதிகாரிகள் கூறும்போது, “தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை பணிகளுக்காக ராஜகீழ்ப்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது. இந்த பணிகள் முடிந்த பிறகு சாலை அமைக்கும் பணிகள் நிறைவடையும்போது ஏரியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி ஏரி முழுமையாக நீர் தேக்்கும் அளவுக்கு சீரமைக்கும் பணிகள் நடைபெறும்” என்றனர்.

Next Story