அதிகாரிகள் வராததால் நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிகள் முடங்கின பொதுமக்கள் அவதி


அதிகாரிகள் வராததால் நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிகள் முடங்கின பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 14 Sep 2018 9:30 PM GMT (Updated: 14 Sep 2018 7:58 PM GMT)

நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு நேற்று அதிகாரிகள் வராததால் பணிகள் முடங்கின. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

நெல்லை, 

நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு நேற்று அதிகாரிகள் வராததால் பணிகள் முடங்கின. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

வட்டார போக்குவரத்து அலுவலகம்

நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகம் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் உள்ளது. இங்கு மண்டல துணை போக்குவரத்து ஆணையாளர் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஓட்டுனர் உரிமம், வழித்தட அனுமதி, ஓட்டுனர் பயிற்சி சான்றிதழ், வாகன தகுதி சான்றிதழ்(எப்.சி.) உள்ளிட்ட சான்றிதழ்களை பெறுவதற்கு 200-க்கும் மேற்பட்டோர் வந்து செல்வார்கள்.

இந்த அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் 4 போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 25-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். தற்போது வட்டார போக்குவரத்து அலுவலர் பதவி காலியாக உள்ளது. இதனால் திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல் கூடுதல் பொறுப்பாக இதை கவனித்து வருகிறார். அவர் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் இங்கு வந்து பணிகளை கவனிக்கிறார். மேலும் தென்காசி, வள்ளியூர் ஆகிய ஊர்களிலும் வட்டார போக்குரத்து அலுவலர் பதவி காலியாக உள்ளதால் அங்கும் இவர் தான் கவனித்து வருகிறார்.

பணிகள் முடங்கின

இதனால் வழித்தட அனுமதி வழங்கும் பணிகள் மந்தமாக நடந்து வருகிறது. 4 போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் பதவி இடத்தில் ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். இவர் மட்டுமே ஓட்டுனர் உரிமம், வழித்தட அனுமதி, ஓட்டுனர் பயிற்சி சான்றிதழ், வாகன தகுதி சான்றிதழ்(எப்.சி.) உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்குவதற்கான ஆவணங்களையும், வாகனங்களையும் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கி வருகிறார். இதனால் ஒரு குறிப்பிட்ட அளவு சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று வட்டார போக்குவரத்து அலுவலரும், போக்குவரத்து ஆய்வாளரும் விடுப்பு காரணமாக பணிக்கு வரவில்லை. இதனால் ஓட்டுனர் உரிமம், ஓட்டுனர் பயிற்சி சான்றிதழ், வாகன தகுதி சான்றிதழ்(எப்.சி.) பெறுவதற்கு வந்த நபர்களுக்கும், வாகனங்களையும் ஆய்வு செய்ய ஆட்கள் இல்லாமல் நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அனைத்து பணிகளும் முடங்கின. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

ஓட்டுனர் உரிமம், ஓட்டுனர் பயிற்சி சான்றிதழ் பெற வந்தவர்கள் நீண்ட நேரம் காத்து இருந்துவிட்டு ஏமாற்றத்துடன் சென்றனர். ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு வைக்கக்கூடிய தேர்வுகளும் நடைபெறவில்லை. வாகன தகுதி சான்றிதழ் பெற வந்த லாரி, வேன், பஸ்கள் அங்கே நிறுத்திவைக்கப்பட்டு உள்ளன.

ஓட்டுனர் உரிமம், ஓட்டுனர் பயிற்சி சான்றிதழ் பெற வந்தவர்கள் அங்குள்ள ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு அவர்கள், அதிகாரிகள் இல்லாமல் எங்களால் எந்த சான்றிதழ்களும் வழங்க முடியாது. நீங்கள் வேண்டுமானால் போராட்டம் நடத்துங்கள் என்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story