‘குடும்ப செலவுக்கு பணம் தராததால் வியாபாரியை அடித்து கொன்றோம்’ கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்


‘குடும்ப செலவுக்கு பணம் தராததால் வியாபாரியை அடித்து கொன்றோம்’ கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 14 Sep 2018 10:30 PM GMT (Updated: 14 Sep 2018 8:07 PM GMT)

குடும்ப செலவுக்கு பணம் தராததால் வியாபாரியை அடித்து கொன்றோம் என்று கைதானவர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளனர்.

சேந்தமங்கலம்,

சேந்தமங்கலம் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டி, பெருமப்பட்டி காலனியை சேர்ந்தவர் கொக்கி கிருஷ்ணன்(வயது 47). கிழங்கு வியாபாரி. இவர் கடந்த மாதம் 21-ந்தேதி பொட்டணம் கிராமத்தில் இருந்து மரூர்பட்டி செல்லும் வழியில் முட்புதரில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதையடுத்து பிணத்தை கைப்பற்றி சேந்தமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 47 வயது பெண் ஒருவருக்கும், கொக்கி கிருஷ்ணனுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. இருவரும் தனியாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக கொக்கி கிருஷ்ணனின் கள்ளக்காதலியின் மகள், நண்பரான 43 வயதான கூலி தொழிலாளி ஒருவரையும் போலீசார் கைது செய்தனர். உடல்நிலை குறைவால் கள்ளக்காதலி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீசில் கைதான 2 பேரும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கள்ளக்காதலியும் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:-

வியாபாரி கொக்கி கிருஷ்ணன் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து செல்வார். அவர் குடும்பம் நடத்துவதற்கு சரிவர பணம் தரவில்லை. அதன்பிறகு பல மாதங்களாக எங்கள் வீட்டுக்கு வரவில்லை. கடந்த மாதம் 20-ந்தேதி வீட்டுக்கு வந்த போது பணம் கேட்ட போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்து நாங்கள் 3 பேரும் சேர்ந்து அவரை அடித்தோம். இதில் அவர் இறந்து விட்டார். யாருக்கும் தெரிய கூடாது என்பதற்காக சாக்குமூட்டையில் அவரது பிணத்தை கட்டி எடுத்து சென்று பொட்டணம் கிராமத்தில் இருந்து மரூர்பட்டிக்கு செல்லும் வழியில் முட்புதரில் வைத்து எரித்தோம். போலீஸ் விசாரணையில் சிக்கி கொண்டோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் வரும் கள்ளக்காதலி குணம் அடைந்த உடன் அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Next Story