கவர்னர் மாளிகை முன்பு பொதுப்பணித்துறை ஊழியர் குழந்தைகளுடன் தர்ணா


கவர்னர் மாளிகை முன்பு பொதுப்பணித்துறை ஊழியர் குழந்தைகளுடன் தர்ணா
x
தினத்தந்தி 14 Sep 2018 10:45 PM GMT (Updated: 14 Sep 2018 8:19 PM GMT)

புதுச்சேரியில் கவர்னர் மாளிகை முன்பு பொதுப்பணித்துறை ஊழியர் குழந்தைகளுடன் தர்ணாவில் ஈடுபட்டார்.

புதுச்சேரி,

புதுச்சேரி தேத்தாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகையன். பொதுப்பணித்துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பாலம்மாள்(வயது 45). புதுவை கோர்ட்டில் பல்நோக்கு ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் விடுப்பு எடுத்து புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அவருக்கு உடல்நிலை முழுமையாக குணமடைய வில்லை. எனவே அவர், விடுமுறையை நீட்டிப்பு செய்து விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு விடுமுறை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் முருகையன் தனது 2 குழந்தைகளுடன் நேற்று மாலை திடீரென கவர்னர் மாளிகை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.

அப்போது தனது மனைவிக்கு உடல்நிலை குணமாகும் வரை விடுமுறை வழங்க வேண்டும், பணியை வேறு துறைக்கு மாற்றி வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றிய தகவல் அறிந்த பெரியகடை போலீசார் விரைந்து சென்று தர்ணாவில் ஈடுபட்டவரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர் போராட்டத்தினை கைவிட்டு, அங்கிருந்து சென்றார். இந்த சம்பவத்தால் கவர்னர் மாளிகை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story