2-வது மனைவியை கொலை செய்த டிரைவருக்கு ஆயுள் தண்டனை


2-வது மனைவியை கொலை செய்த டிரைவருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 14 Sep 2018 9:30 PM GMT (Updated: 14 Sep 2018 8:41 PM GMT)

காட்பாடி அருகே முதல் மனைவி மற்றும் மகள்கள் பெயரில் வீட்டை எழுதி கொடுக்காததால் 2-வது மனைவியை கொலை செய்த லாரி டிரைவருக்கு வேலூர் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

வேலூர், 


காஞ்சீபுரம் மாவட்டம் முசரவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா (வயது 51). இவர் அங்குள்ள செங்கல் சூளையில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மல்லிகா என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். அதே பகுதியில் உள்ள மேல்மதுராமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பொண்ணு (40). இவர், சிவா வேலை பார்த்த செங்கல் சூளையில் வேலைபார்த்து வந்தார்.

சின்னப்பொண்ணு திருமணமாகி கணவரைவிட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனால் செங்கல் சூளையில் வேலை பார்த்த போது அவருக்கும், சிவாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் திருப்பதிக்கு சென்று திருமணம் செய்துகொண்டு காட்பாடி அருகே உள்ள திருப்பாக்குட்டை என்ற கிராமத்தில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.

திருப்பாக்குட்டை கிராமத்தில் சின்னப்பொண்ணு பெயரில் ஒரு வீடு வாங்கப்பட்டுள்ளது. அவருக்கு குழந்தை இல்லாததால் அந்த வீட்டை தனது முதல் மனைவி மற்றும் மகள்கள் பெயரில் எழுதித்தருமாறு சிவா கேட்டுள்ளார். அதற்கு சின்னப்பொண்ணு மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் சின்னப்பொண்ணு மீது சிவாவிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 20.9.2010 அன்றும் வீட்டை எழுதிக்கொடுக்குமாறு சிவா கேட்டுள்ளார். அப்போதும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சிவா விறகு கட்டையால் சின்னப்பொண்ணுவை தாக்கி, கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த அவரை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து திருவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணை வேலூர் கூடுதல் மாவட்ட விரைவு கோர்ட்டில் நடைபெற்றது. அரசு வழக்கறிஞர் அ.கோ.அண்ணாமலை ஆஜரானார். நீதிபதி எஸ்.குணசேகரன் வழக்கை விசாரித்து சிவாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். 

Next Story