தசரா விழாவில் பங்கேற்க 2-வது கட்ட கஜபயணம் மேலும் 6 யானைகள் மைசூரு வந்தன


தசரா விழாவில் பங்கேற்க 2-வது கட்ட கஜபயணம் மேலும் 6 யானைகள் மைசூரு வந்தன
x
தினத்தந்தி 14 Sep 2018 11:00 PM GMT (Updated: 14 Sep 2018 8:52 PM GMT)

தசரா விழாவில் பங்கேற்க 2-வது கட்ட கஜபயணமாக மேலும் 6 யானைகள் நேற்று மைசூருவுக்கு வந்தன.

மைசூரு, 

தசரா விழாவில் பங்கேற்க 2-வது கட்ட கஜபயணமாக மேலும் 6 யானைகள் நேற்று மைசூருவுக்கு வந்தன.

கஜபயணம்

உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை நடக்கிறது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்புசவாரி ஊர்வலம் அடுத்த மாதம் 19-ந்தேதி நடக்கிறது. இதில் யானைகள் கலந்துகொண்டு அணிவகுத்து செல்லும். இந்த விழாவில் பங்கேற்க முகாம்களில் வளர்க்கப்பட்டு வரும் யானைகள் மைசூருவுக்கு அழைத்துவரப்படுவது வழக்கம். இந்த நிகழ்வு கஜபயணம் என்று அழைக்கப்படுகிறது.

முதற்கட்டமாக அர்ஜுனா உள்பட 6 யானைகள் கடந்த 2-ந்தேதி கஜபயணமாக மைசூருவுக்கு அழைத்துவரப்பட்டன. அந்த யானைகள் மைசூரு மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் தங்கவைக்கப்பட்டு, 5-ந்தேதி அரண்மனைக்குள் அழைத்துவரப்பட்டன. அந்த யானைகளுக்கு தினமும் நடைபயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் 6 யானைகள் வருகை

இந்த நிலையில் 2-வது கட்ட கஜபயணமாக மேலும் 6 யானைகள் நேற்று மைசூருவுக்கு அழைத்துவரப்பட்டன. அதாவது மைசூரு மாவட்டம் நாகரஒலே வனச்சரணாலயத்திற்கு உட்பட்ட மத்திக்கோடு முகாமில் இருந்து பலராமா, அபிமன்யூ, துரோனா ஆகிய 3 யானைகளும், குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா குசால்நகர் அருகே துபாரே முகாமில் இருந்து பிரசாந்த், காவேரி, விஜயா ஆகிய 3 யானைகளும் என மொத்தம் 6 யானைகள் லாரிகள் மூலம் நேற்று மாலை மைசூருவுக்கு வந்தன.

பின்னர் அந்த 6 யானைகளும் மைசூரு அரண்மனையின் ஜெயமார்த்தாண்ட நுழைவு வாயில் வழியாக அரண்மனை சம்பிரதாய முறைப்படி சிறப்பு பூஜை செய்து, ஆரத்தி எடுத்தும் அரண்மனைக்குள் அழைத்துவரப்பட்டன. இந்த யானைகளுடன் அதன் பாகன்களும், பாகன்களின் குடும்பத்தினரும் வந்துள்ளனர். அவர்களுக்கு அரண்மனை வளாகத்தில் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Next Story