ஆத்தூர் அருகே தண்டவாளத்தில் மண் அரிப்பு: சேலம் பயணிகள் ரெயில் தப்பியது


ஆத்தூர் அருகே தண்டவாளத்தில் மண் அரிப்பு: சேலம் பயணிகள் ரெயில் தப்பியது
x
தினத்தந்தி 14 Sep 2018 11:15 PM GMT (Updated: 14 Sep 2018 8:56 PM GMT)

ஆத்தூர் அருகே தண்டவாளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த சேலம் பயணிகள் ரெயிலை கிராம மக்கள் சிவப்பு துணியை காட்டி நிறுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

ஆத்தூர்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் வழியாக தினமும் சேலம்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில், சேலம்- விருத்தாசலம் பயணிகள் ரெயில், பெங்களூரு-நாகை பயணிகள் ரெயில் மற்றும் சரக்கு ரெயில்கள் உள்ளிட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

ஆத்தூர் அருகே அம்மம்பாளையத்தில் ஆளில்லாத ரெயில்வே கேட் உள்ளது. இந்த பகுதியில் சுரங்க வழிப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் அருகில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியும், இதற்காக மண் கொட்டப்பட்டு, அதற்கு மேல் ஜல்லி கற்கள் போடும் பணியும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அம்மம்பாளையம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள தண்டவாள பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் சுமார் 1½ அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது.

இதனை நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அப்போது காலை 6.45 மணிக்கு விருத்தாசலத்தில் இருந்து ஆத்தூர் வழியாக சேலம் செல்லும் பயணிகள் ரெயில் சற்று தூரத்தில் வந்து கொண்டிருந்தது. இதை பார்த்ததும் கிராம மக்கள் திடுக்கிட்டனர்.

உடனே சிவப்பு துணியை கையில் எடுத்து ரெயில் டிரைவர் பார்க்கும்படி அசைத்தனர். இதை கண்ட டிரைவர் ரெயிலை சற்று தூரத்தில் நிறுத்தினார். பின்னர் அவர் இறங்கி வந்து பார்த்தபோது தண்டவாளத்தில் அரிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. உடனே ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு மண் அரிப்பு சீரமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரெயில் அங்கிருந்து மீண்டும் புறப்பட்டு ஆத்தூர் ரெயில் நிலையத்துக்கு அரை மணி நேரம் தாமதமாக 8.05 மணிக்கு சென்றது. அங்கிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சேலம் புறப்பட்டது. கிராம மக்கள் சரியான நேரத்தில் சிவப்பு துணியை காட்டி ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதன் மூலம் சேலம் பயணிகள் ரெயில் தப்பியது.

Next Story