மழை வெள்ளம்-நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குடகு மாவட்டத்தில் 3 நாட்களாக மத்திய குழுவினர் ஆய்வு


மழை வெள்ளம்-நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குடகு மாவட்டத்தில் 3 நாட்களாக மத்திய குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 15 Sept 2018 4:00 AM IST (Updated: 15 Sept 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

மழை வெள்ளம்-நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குடகு மாவட்டத்தில் 3 நாட்களாக மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். அவர்களிடம் மக்கள், கண்ணீர் மல்க தங்களின் குறைகளை தெரிவித்தனர்.

குடகு, 

மழை வெள்ளம்-நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குடகு மாவட்டத்தில் 3 நாட்களாக மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். அவர்களிடம் மக்கள், கண்ணீர் மல்க தங்களின் குறைகளை தெரிவித்தனர்.

வரலாறு காணாத சேதம்

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குடகு மாவட்டத்தில் கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி வந்தது. இந்த தொடர் கனமழையாலும், நிலச்சரிவாலும் குடகு மாவட்டத்தில் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டது. இதனால் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. 123 கிலோ மீட்டர் சாலைகள் முற்றிலும் சேதமடைந்தன.

மழை வெள்ளம், நிலச்சரிவால் குடகு மாவட்டத்தில் 12 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் உறவுகளையும், உடைமைகளையும் இழந்து நிவாரண முகாம்களில் பரிதவித்து வருகிறார்கள். நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு செய்து வருகிறது.

குமாரசாமி கோரிக்கை

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு மாநில அரசு சார்பில் தக்க நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளை இழந்தவர்களுக்கு வேறு இடத்தில் வீடுகள் கட்டி கொடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மடிகேரி பகுதியில் 50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதல்-மந்திரி குமாரசாமி, சமீபத்தில் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

அப்போது, கர்நாடகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், மத்திய குழுவினரை அனுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

மத்திய குழுவினர் ஆய்வு

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய குழுவினர் கர்நாடகத்திற்கு வந்தனர். முதலில் அவர்கள் உடுப்பியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில் அனில் மல்லிக், ஜிதேந்திரா பானுவார், பொன்னுசாமி ஆகியோர் தலைமையிலான மத்திய குழுவினர் கடந்த 12-ந்தேதி குடகு மாவட்டத்துக்கு வந்தனர். குடகு மாவட்டத்தில் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டுள்ளதால், மத்திய குழுவினர் கடந்த 3 நாட்களாக குடகில் முகாமிட்டு பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

3-வது நாளான நேற்று, மத்திய குழுவினர் தேவசூர், எப்பட்டகேரி, சந்திபாலா, சாலூர், குந்தரகோடி ஆகிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ஜோடுபாலா பகுதியில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வரும் மடிகேரி-மங்களூரு சாலையையும் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவருடன் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவித்யா, பிரதாப் சிம்ஹா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அப்பச்சு ரஞ்சன், கே.ஜி.போப்பையா மற்றும் அரசு அதிகாரிகளும் சென்றனர்.

ஆலோசனை

மத்திய குழுவினர், கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்து கொண்டனர். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தபோது, அந்தப்பகுதிகளை சேர்ந்த மக்கள், கண்ணீர் விட்டு அழுது அவர்களிடம் தங்களின் குறைகளை கூறினர். அவற்றையும் மத்திய குழுவினர் கேட்டறிந்து கொண்டனர். ேமலும், மக்களின் குறைகளை மத்திய அரசிடம் கூறி, அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர்.

இதையடுத்து மத்திய குழு அதிகாரிகள், மடிகேரி கலெக்டர் அலுவலகத்தில் குடகில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

இதையடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டனர்.

Next Story