சாலையின் குறுக்கே நாய் ஓடியதால் மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற கர்ப்பிணி தூக்கி வீசப்பட்டு சாவு


சாலையின் குறுக்கே நாய் ஓடியதால் மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற கர்ப்பிணி தூக்கி வீசப்பட்டு சாவு
x
தினத்தந்தி 15 Sept 2018 4:30 AM IST (Updated: 15 Sept 2018 2:41 AM IST)
t-max-icont-min-icon

சோழங்குறிச்சி பிரிவு சாலையின் குறுக்கே நாய் ஓடியதால் மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற கர்ப்பிணி தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்தனர்.

உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி சுகன்யா (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடமாகிறது. தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்த சுகன்யா, தனது கணவர் ராமகிருஷ்ணனுடன் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் பெற்றோர் வீடான காசாங்கொட்டைக்கு சென்று கொண்டிருந்தார்.

சோழங்குறிச்சி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது நாய் ஒன்று சாலையின் குறுக்கே ஓடியது. அப்போது நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ராமகிருஷ்ணன், சுகன்யா இருவரும் தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்தனர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்றவர்கள் ராமகிருஷ்ணன், சுகன்யா ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சுகன்யா பரிதாபமாக உயிரிழந்தார். ராமகிருஷ்ணன் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சுகன்யாவின் தாய் சுமதி உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story