முத்துப்பேட்டை: விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு போலீசார் அணிவகுப்பு ஒத்திகை


முத்துப்பேட்டை: விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு போலீசார் அணிவகுப்பு ஒத்திகை
x
தினத்தந்தி 14 Sep 2018 11:00 PM GMT (Updated: 14 Sep 2018 10:07 PM GMT)

முத்துப்பேட்டையில் வருகிற 18-ந்தேதி நடைபெறும் விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு போலீசார் அணி வகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இந்து முன்னணி சார்பில் 26-ம் ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த ஊர்வலத்தில் ஜாம்புவானோடை, வடகாடு, உப்பூர், தில்லைவிளாகம், அரமங்காடு, ஆலங்காடு உள்பட 19 பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்பட்டு ஜாம்புவானோடை வடக்காடு சிவன் கோவிலில் இருந்து புறப்படும் ஊர்வலம் வைரவன் சோலை, ஜாம்புவானோடை தர்கா, மேலகாடு, கோரை ஆற்றுபாலம் பகுதி வழியாக முத்துப்பேட்டை ஆசாத்நகருக்கு வருகிறது. பின்னர் அங்கிருந்து திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பஸ் நிலையம் சென்று பட்டுக்கோட்டை சாலையில் உள்ள நியூபஜார், கொய்யா முக்கம், பங்களாவாசல் வழியாக செம்படவன்காடு சென்று அங்குள்ள பாமினி ஆற்றில் கரைக்கப்படுகிறது.

இந்தநிலையில் விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு நேற்று முத்துப்பேட்டையில் போலீசார் அணி வகுப்பு ஒத்திகை நடைபெற்றது. முன்னதாக பட்டுக்கோட்டை சாலை ரக்மத் பெண்கள் பள்ளி அருகில் இருந்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பங்கேற்ற போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் புறப் பட்டது.

அங்கிருந்து ஊர்வலம் செக்கடிக்குளம், பங்களாவாசல், கொய்யா முக்கம், நியூபஜார் வழியாக வந்து திருத்துறைப்பூண்டி சாலை, ஆசாத்நகர் வந்து ஜாம்புவானோடை கோரையாறு பாலம் வழியாக சென்று சிவராமன் நினைவகம் வரை சென்றது. இதில் முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு இனிக்கோதிவ்யன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ் (முத்துப்பேட்டை), சுப்ரியா (பெருகவாழ்ந்தான்), சிவதாஸ் (எடையூர்), சப்-இன்ஸ்பெக்டர்கள் கணபதி, உமாதேவி, இலங்கேஸ்வரன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.

Next Story