ஒவ்வொரு மாதமும் சாதனை புரிந்த பெண்களை தேர்வு செய்து ‘சேலம் தங்கமகள்’ பட்டம் வழங்கப்படும்


ஒவ்வொரு மாதமும் சாதனை புரிந்த பெண்களை தேர்வு செய்து ‘சேலம் தங்கமகள்’ பட்டம் வழங்கப்படும்
x
தினத்தந்தி 14 Sep 2018 11:41 PM GMT (Updated: 14 Sep 2018 11:41 PM GMT)

ஒவ்வொரு மாதமும் சாதனை புரிந்த பெண்களை தேர்வு செய்து ‘சேலம் தங்கமகள்‘ என்ற பட்டம் வழங்கப்படும் என்று கலெக்டர் ரோகிணி பேசினார்.

சேலம்,

சமூக நலத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் நேற்று ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்‘ என்ற திட்டத்தின் பிங்கத்தான்-2018 என்ற விழிப்புணர்வு ஊர்வலம், சேலம் தங்கமகள் இயக்கம் தொடக்க விழா ஆகியவை சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

விழாவுக்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கி தங்க மகள் இயக்கம் தொடர்பான லோகோவை அறிமுகம் செய்து வண்ண பலூன்களை பறக்கவிட்டார். விழாவில் கலெக்டர் ரோகிணி பேசியதாவது:-

பாலின பாகுபாட்டை நீக்கி, பெண் குழந்தைகளுக்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும் நோக்கில், அவர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதுடன், திறமைகளையும், படைப்புகளையும் அங்கீகரிக்கும் விதமாக சேலம் தங்கமகள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இனி ஒவ்வொரு மாதமும் சாதனை புரிந்த பெண்களை தேர்வு செய்து ‘சேலம் தங்கமகள்‘ என்ற பட்டம் வழங்கப்படும். பெண் குழந்தைகளை 18 வயது நிறைவடைவதற்கு முன்பாக திருமண வாழ்வில் தள்ளப்படுவது மிகப்பெரிய தவறாகும். அதேபோல் அவர்களை குழந்தை தொழிலாளர்களாகவும், பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்துவதும் கடும் குற்றமாகும்.

குழந்தைகளை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்று தர பெற்றோர்கள், பொதுமக்கள் முன்வர வேண்டும். பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளை போல் அனைத்து வகையிலும் சமமாக வளர்த்து அவர்களுக்கு தைரியம், தன்னம்பிக்கை ஏற்படுத்தி உலக அளவில் நமது நாட்டின் பெருமைக்கு துணை நிற்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மாணவிகளுடன் நடந்து சென்றார். இந்த ஊர்வலம் முள்ளுவாடி கேட், மாவட்ட கலெக்டர் அலுவலகம், பெரியார் மேம்பாலம், அண்ணா பூங்கா வழியாக மீண்டும் காந்தி விளையாட்டு மைதானத்தை அடைந்தது. இதில் திரளான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

அவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தி சென்றனர். இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) வந்தனா கார்க், மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) தேவிகுமாரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story