ஏன் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்ய வேண்டும்?


ஏன் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்ய வேண்டும்?
x
தினத்தந்தி 15 Sept 2018 4:42 PM IST (Updated: 15 Sept 2018 4:42 PM IST)
t-max-icont-min-icon

நிதி முதலீட்டில் ஈடுபட விரும்புபவர்களுக்கு எஸ்.ஐ.பி. எனப்படும் முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டங்கள் நல்ல தேர்வாக இருக்கும்.

இவை சமீபகாலமாக முதலீட்டாளர்களுக்கும் முதலீட்டு ஆலோசகர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளன.

நீங்கள் ஏன் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை இங்கே காணலாம்...

முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டங்களில் உள்ள முதல் மற்றும் முக்கிய நன்மையே, முதலீட்டாளரை நிதி ஒழுக்கமுடையவராக மாற்றுவதுதான். ஏனெனில் இதில் ஒரு நிலையான அளவு பணத்தைக் குறிப்பிட்ட காலத்துக்குத் தொடர்ந்து செலுத்தி வர வேண்டும். இந்த முதலீட்டுத் திட்டத்தில் செலுத்தும் தொகை அதிகமாக இருக்கும் வேண்டும் என்பது அவசியமில்லை. மாதம் ரூ. 100-ஐ கூட முதலீடாகச் செலுத்தலாம். உங்கள் வருவாய் அதிகரிக்கும்பட்சத்தில், நிதி இலக்குகளை விரைவாக அடையும் பொருட்டு, இந்த முதலீட்டுத் திட்டத்தில் செலுத்தும் மாதாந்திர முதலீட்டை அதிகரிக்கும் வசதியும் உள்ளது. இவை சந்தை நிலவரங்களால் பாதிப்பு ஏற்படாதவகையில் முதலீடுகளை உங்களிடம் இருந்து பெறுகின்றன. உங்கள் சம்பளத் தேதியின்போது மாதாந்திர முதலீட்டைத் தானாகவே செலுத்தும் வசதியையும் தேர்வு செய்துகொள்ளலாம்.

எஸ்.ஐ.பி. திட்டங்கள் நீண்டகால முதலீடுகள் என்பதால், கூட்டு சேர்த்தல் என்பது மிகப்பெரிய நன்மையைத் தரும், முதலீட்டாளர்களுக்கு அதிகளவு லாபத்தைக் கொடுக்கும். நிதி ஆலோசகர்களின் பரிந்துரைப்படி, வேலையில் சேர்ந்த உடனேயே இந்த முதலீட்டைத் துவங்கி விட்டால் எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவிலான வருவாய் கிடைக்கும். எடுத்துக்காட்டாக நாம் மாதம் ரூ. 1000-ஐ பங்குகளுடன் சேர்ந்த முறைப்படுத்தப்பட்ட முதலீடாக 10 ஆண்டுகால இலக்குடன் முதலீடு செய்தால், 10 ஆண்டுகள் கழித்து 12 சதவீத லாபத்துடன் சுமார் ரூ. 2.3 லட்சம் கிடைக்கும்.

முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டத்தின் கீழ் பரஸ்பர நிதியில் முதலீடு செய்கையில், குறிப்பிட்ட தொகையை தொடர்ந்து முதலீடு செய்யும்போது, நிதி அலகுகளின் மொத்த சொத்து மதிப்பு குறைவாக இருந்தால் அதிக அலகுகள் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு மாதம் நீங்கள் ரூ. 1000 செலுத்தும்போது, ஓர் அலகின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 20 என இருந்தால் 500 அலகுகள் கிடைக்கும். அடுத்தமுறை அதே ரூ. 1000-ஐ செலுத்தினால், அலகுகளின் நடப்பு மொத்த சொத்து மதிப்பைப் பொறுத்துக் கடந்தமுறை கிடைத்த அலகுகளைவிட அதிகமாகவோ அல்லது குறைவாகவோதான் கிடைக்கும். ஒருமுறை முதலீடு செய்வதைக் காட்டிலும், இம்முறையில் குறிப்பிட்ட காலத்துக்குத் தொடர்ந்து முதலீடு செய்வதால், பொதுவாகவே முடிவில் அதிகளவிலான அலகுகள் இருக்கும். அதிக அளவு அலகுகளின் மூலம் அதிக லாபத்தை அடையலாம். ஆகவே அனைத்து பொதுவான முதலீடுகளிலும் முன்கூட்டியே கூறப்படும் மொத்தத் தொகையைப் பொறுத்து குறிப்பிட்ட காலத்துக்கான சராசரி முதலீட்டு மதிப்பை முதலீட்டாளர் அறியலாம். அந்தச் சராசரி முதலீட்டு அளவின் மூலம் கிடைக்கும் வருவாய், சராசரி முதலீட்டைப் பொறுத்து அமையாமல் அதன் மூலம் வரும் பரஸ்பர நிதி அலகுகளின் மதிப்பைப் பொறுத்து இருக்கும் என்பதால், முன்பு கணித்ததை விட அதிகலாபம் கிடைக்கும்.

எஸ்.ஐ.பி. முறையில் செய்யும் முதலீடு, நம் எதிர்கால நிதி இலக்குகளை அடைய உதவும். பரம்பரைச் சொத்துகள் இல்லாத நிலையில், எதிர்காலத்தில் வரும் பெரும் செலவுகளைச் சமாளிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. எனவே முன்னெச்சரிக்கையாக உங்கள் குழந்தைகளின் உயர்கல்வி, சொந்த வீடு வாங்குதல், திருமணம் போன்றவற்றுக்காக முன்கூட்டியே குறிப்பிட்ட காலத்துக்கு முதலீடு செய்வது நல்லது.

இந்த முதலீட்டுத் திட்டத்தில் உள்ள முக்கியமான நன்மை, பன்முகத்தன்மை. ஏனெனில் இதில் கடன், பங்கு, அரசு பத்திரங்கள் எனப் பல்வேறுவித முதலீட்டுத் திட்டங்களில் குறைந்த அளவு பணத்தைக்கூட முதலீடு செய்யமுடியும் என்பதால் ஆபத்துக் குறைவு.


Next Story