திராவிட இயக்கங்களை அவதூறு பேசி வீழ்த்தி விடலாம் என்று கனவுகாணுகிறார்கள், ம.தி.மு.க. மாநாட்டில் கி.வீரமணி பேச்சு
திராவிட இயக்கங்களை அவதூறு பேசி வீழ்த்தி விடலாம் என்று கனவு காணுகிறார்கள் என ம.தி.மு.க. மாநாட்டில் கி.வீரமணி கூறினார்.
ஈரோடு,
ம.தி.மு.க. மாநில மாநாடு ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழக மக்களுக்காக எந்த சூழ்நிலையிலும் ராணுவ தலைவராக களத்தில் நிற்பவர் வைகோ. தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் திராவிட இயக்கத்தை தாங்கி நிற்பவர். இன உணர்வு, மொழி உணர்வு, பண்பாட்டு உணர்வுகளை மக்களுக்கு ஏற்படுத்துவதில் பல தியாகங்கள் செய்து வருகிறார். இதுவரை அவர் செய்த தியாகங்கள் பலன் தரவில்லை. ஆனால் அவர் ஒரு ஆறுபோல எல்லா இடத்திலும் நீர் பாய்ச்சி இருக்கிறார். அனைத்து இடங்களிலும் அது விளைச்சல் தரவில்லை. அதற்கு அவர் பாய்ச்சிய நீரின் குறைபாடு காரணமல்லை. விதைகளின் குறைபாடுதான் காரணம்.
வைகோவின் பொன்விழாவுக்கு பின், அவரது தியாக வாழ்வு முழுமையாக அங்கீகரிக்கப்படும். தியாகத்துக்கான அறுவடையும் கிடைக்கும். இன்னும் செய்ய வேண்டிய பணிகள் அதிகம் உள்ளது. தற்போது நாம் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் அதிகம் உள்ளன. அவை குறித்து இந்த மாநாட்டில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அது தமிழ் இனம் மட்டுமின்றி இந்திய நாட்டுக்கே உரிமை சாசனமாக விளங்குகின்றன.
இந்த மாநாடு அரசியல் வகுப்பறையாக, சமுதாய பள்ளியாக மாறி, இத்தகைய தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளனர். வைகோவை மிசா, தடா, பொடா போன்ற அடக்குமுறை சட்டங்கள் எதுவும் செய்ய முடியாது. அந்த சட்டங்களை எல்லாம் பதம் பார்த்தவர் வைகோ. சட்டங்கள் தான் வைகோவிடம் தோற்று இருக்கிறது.
நாம் இதுவரை சந்தித்த எதிரிகள் நாணயமானவர்கள். ஆனால் இப்போது சந்தித்து கொண்டிருக்கிற எதிரிகள் நாணயம் இல்லாதவர்கள். இந்த போர்க்களத்தை சந்திக்க இங்கே படமாகவும், பாடமாகவும் இருக்கும் தலைவர்கள் தெளிவான ஆயுதங்களை தந்துஇருக்கிறார்கள். அவற்றை சரியாக பயன்படுத்தி களத்தில் வாளாக சுழல செய்யும் தளபதியாக இருப்பவர் வைகோ. அவருடைய அறிவு, ஆற்றல், தியாகம், தொண்டு ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
திராவிட இயக்கங்களை அவதூறு பேசி வீழ்த்தி விடலாம் என்று கனவுகாணுகிறார்கள். இந்த போராட்ட களத்தில் ராணுவ தளபதியாக வைகோ இருப்பார்.
50 ஆண்டுகள் அல்ல 100 ஆண்டுகள் கடந்தாலும் வைகோவை அடையாளம் கண்டு இந்த சமுதாயம் அவர் பின்னே அணிவகுக்க வேண்டும். தமிழ்இனத்திற்கு வரும் அனைத்து ஆபத்துகளையும் தடுக்கும் ஆற்றல் பெற்றவர் வைகோ. இன்று சமூக நீதி, மதசார்பின்மை, ஜனநாயகம், மகளிர் உரிமை ஆகியவை கேலியாக போய்விட்டது. இதை தடுத்து நிறுத்த திராவிட இயக்கங்களால் மட்டுமே முடியும். அந்த திராவிட இயக்கம் பெரியார், அண்ணா, கலைஞர் என்ற வரிசையில் இருக்கும். அதை பிரகடனப்படுத்தும் தளபதியாக வைகோ இருப்பார். தற்போது முதிர்ச்சி அடைந்த நாயகனாக இவர் சிறந்த வெற்றிகளை பெறுவார்.
இவ்வாறு கி.வீரமணி கூறினார்.