அந்தியூர் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 7 குடும்பத்தை சேர்ந்த 31 பேர் மீட்பு
அந்தியூர் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்த 7 குடும்பத்தை சேர்ந்த 31 பேரை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.
அந்தியூர்,
விழுப்புரம் மாவட்டம் ஆனங்கூரை சேர்ந்தவர் செல்வம் (வயது 39). இவருடைய மனைவி ஆனந்தி (35). இவர்களுக்கு நித்யா (5), நிதாதா (2) என்ற 2 மகள்களும், நித்திஷ் (4) என்ற மகனும் உள்ளனர். இவர் தனது குடும்பத்துடன் ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த முனியப்பன்பாளையத்தில் உள்ள செங்கல் சூளையில் தங்கி வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் செல்வம் தனது உறவினர் ஒருவரின் திருமண விழாவுக்கு விழுப்புரம் செல்ல வேண்டி இருந்தது. இதற்காக அவர் செங்கல் சூளை உரிமையாளரை சந்தித்து விழுப்புரம் செல்லவேண்டும் என்று கூறி உள்ளார். ஆனால் செல்வத்தை செங்கல் சூளை உரிமையாளர் அனுப்பாததுடன், அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இதுபற்றி அறிந்தும் அந்தியூர் போலீசார் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று செல்வத்திடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ‘அவருடன் விழுப்புரம் மாவட்டம் ஆனங்கூரை சேர்ந்த மாதவன் (45), அவருடைய மனைவி கோவிந்தம்மாள் (40), இவர்களுடைய மகள் நிவேதா (10), சுரேஷ் (29), அவருடைய மனைவி சுமதி (25), மகள்கள் சுகந்தி (5), சுவேதா (4), மகன் சுகன் (2), ஸ்ரீதர் (25), அவருடைய மனைவி சுபா (23), மகன் சபரீஷ் (3½), சந்தீப் (1) உள்பட 7 குடும்பங்களை சேர்ந்த 7 ஆண்கள், 9 பெண்கள், 15 குழந்தைகள் என மொத்தம் 32 பேர் அந்தியூர் அருகே முனியப்பம்பாளையம் மற்றும் நகலூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் கடந்த 1 ஆண்டாக கொத்தடிமைகளாக தங்கி இருப்பதாகவும், இதில் பெரியவர்கள் மட்டும் செங்கல் சூளையில் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்து வருவதும்’ தெரியவந்தது. உடனே இதுபற்றிய தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் கோபி ஆர்.டி.ஓ. (பொறுப்பு) புகழேந்தி, அந்தியூர் தாசில்தார் பாலகுமரன், வருவாய் ஆய்வாளர்கள் கங்கா (அத்தாணி), விஜயலட்சுமி (அந்தியூர்) மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முனியப்பம்பாளையம் மற்றும் நகலூரில் உள்ள செங்கல் சூளைகளுக்கு அதிரடியாக சென்று ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது 2 செங்கல் சூளைகளிலும் சேர்த்து மொத்தம் 31 பேர் கொத்தடிமைகளாக (செல்வத்தை தவிர) இருந்து வந்ததும்,’ தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 31 பேரையும் அதிகாரிகள் மீட்டு அவர்களை அந்தியூர் தாலுகா அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரையும் விழுப்புரம் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் செல்வம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
செங்கல் சூளையில் 7 குடும்பத்தை சேர்ந்த 31 பேர் மீட்கப்பட்ட சம்பவம் அந்தியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.