காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்க மாநில செயற்குழுவில் தீர்மானம்


காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்க மாநில செயற்குழுவில் தீர்மானம்
x
தினத்தந்தி 16 Sept 2018 4:00 AM IST (Updated: 15 Sept 2018 11:51 PM IST)
t-max-icont-min-icon

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்க மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. இதற்கு மாநில தலைவர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ரெங்கசாமி, மாநில பொருளாளர் பச்சைமுத்து ஆகியோர் அறிக்கை வாசித்தனர். மாவட்ட தலைவர் கண்ணன் வரவேற்றார். கூட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்து பேசினார். மாநில துணைத் தலைவர் சிவன், முன்னாள் மாநில தலைவர் தமிழ்மணி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் கோதண்டபாணி ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில், நெடுஞ்சாலைத்துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். சாலை பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட்டு அரசே ஏற்று நடத்த வேண்டும்.

ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும். கோட்ட கணக்கர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

கருணை அடிப்படையில் வேலை வழங்ககோரி காத்திருக்கும் அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்க வேண்டும். அனைத்து நிலை பணியாளர்களுக்கும் காலதாமதமின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற நவம்பர் மாதம் முதன்மை இயக்குனரிடம் மனு அளிக்க வேண்டும். அடுத்தமாதம்(அக்டோபர்) மாநிலம் முழுவதும் ஊழியர்கள் சந்திப்பு இயக்கம் நடத்த வேண்டும்.

21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் அடுத்தமாதம் 4-ந் தேதி நடக்கும் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் பங்கேற்பது, 13-ந் தேதி சேலத்தில் நடக்கும் வேலைநிறுத்த ஆயத்த மாநாட்டில் கலந்து கொள்வது, நவம்பர் 27-ந் தேதி முதல் நடைபெறும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் முழுமையாக பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மண்டல செயலாளர் அறிவழகன் நன்றி கூறினார்.

Next Story