ஜூன் 3–ந்தேதி கருணாநிதியின் பிறந்த நாள் தமிழ் செம்மொழி நாளாக கடைப்பிடிக்கப்படும் - மு.க.ஸ்டாலின்
கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3–ந்தேதி தமிழ் செம்மொழி நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துளார்.
விழுப்புரம்,
முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச தொடங்கும் போது முக்கிய அறிவிப்பு என்று கூறி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழக இருக்கட்டும் என்று முழங்கிய கலைஞர் அவர் 14–வயதில் தமிழ் கொடி ஏந்தி இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து போராட தொடங்கி, தனது வாழ்வில் இறுதி வரையில் தமிழ் மொழியை காக்க அறும்பாடு பட்டவர். தமிழ் மொழியின் பெருமையை இமயத்தில் நிலைநாட்டும் வகையில் செம்மொழி மாநாட்டை நடத்தி காட்டியவர். அதன் மூலம் இணையத்தில் தொடங்கி நவீன கைபேசி வரையில் தமிழை எளிதாக வித்திட்டவர். இளமை முதல் முதுமை வரையில் தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்த்த கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3–ந்தேதியை தமிழ் செம்மொழி நாளாக கடைபிடிப்போம் என்று உங்களின் ஆதரவோடு அறிவிக்கிறேன்.
அதையொட்டி புதிதாக முத்தமிழ் கலைஞர் பெயரில் ஒரு அறக்கட்டளை உருவாக்கப்படுகிறது. ஏற்கனவே அவரது சொந்த நிதியில் உருவாக்கப்பட்ட அறகட்டளை மூலம் மாதாந்தோறும் மருத்துவ உதவி திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த இந்த புதிய அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஏழை நோயாளிகள் மருத்துவ சிகிச்சை பெற ஆண்டு தோறும் உதவி, பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்க தொகை, ஐ.ஏ.எஸ் அகாடமி ஒன்று தொடங்கப்பட்டு, அதன் மூலமாக மத்திய, மாநில அரசுகள் நடத்தும் தேர்வுகள், வேலை வாய்ப்புகள் ஆகியவற்றில் இளைய தமிழ் சமுதாயம் வெற்றி பெற பயிற்சி அளிக்கப்படும். பல்வேறு துறைகளில் ஆண், பெண் இருபாலரின் சாதனைகளை பாராட்ட சாதனையாளர் விருது, திராவிட இயக்க மூத்த, இளைய படைப்பாளிகளுக்கு திராவிட படைப்பாளி விருதும் வழங்கப்படும்.
மேலும் கழகத்தில் மிக சிறப்பாக செயல்படுகின்ற ஒன்றிய, நகர, பகுதி, வட்ட, பேரூர், ஊராட்சி செயலாளர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள், கழகத்தில் எந்த பதவியையும் எதிர்பாராமல் சமூக பணிகளை மேற்கொண்டு கழகத்துக்கு பெருமை சேர்ப்பவர்களுக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்படும் என்று மகிழ்ச்சியோட தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.