மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில் பெலகாவி விழாவில் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்ட சதீஸ் ஜார்கிகோளி-லட்சுமி ஹெப்பால்கர்


மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில் பெலகாவி விழாவில் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்ட சதீஸ் ஜார்கிகோளி-லட்சுமி ஹெப்பால்கர்
x
தினத்தந்தி 15 Sep 2018 11:00 PM GMT (Updated: 15 Sep 2018 6:50 PM GMT)

பகிரங்க மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில் பெலகாவி விழாவில் சதீஸ் ஜார்கிகோளி மற்றும் லட்சுமி ஹெப்பால்கர் ஆகியோர் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டனர்.

பெலகாவி, 

பகிரங்க மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில் பெலகாவி விழாவில் சதீஸ் ஜார்கிகோளி மற்றும் லட்சுமி ஹெப்பால்கர் ஆகியோர் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டனர்.

காங்கிரசுக்கு நிபந்தனை

பெலகாவி மாவட்ட காங்கிரசில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. அந்த மாவட்ட பொறுப்பு மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி, அவரது சகோதரர் சதீஸ் ஜார்கிகோளி மற்றும் லட்சுமி ஹெப்பால்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன.

லட்சுமி ஹெப்பால்கருக்கு மந்திரி பதவி வழங்கக்கூடாது என்று ஜார்கிகோளி சகோதரர்கள் காங்கிரசுக்கு நிபந்தனை விதித்துள்ளனர். இது கூட்டணி ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கன்னத்தை தடவி...

இந்த நிலையில் கர்நாடக சட்ட சங்க கல்வி நிறுவன பவள விழாவில் கலந்துகொள்ள நேற்று காலை முதல்-மந்திரி குமாரசாமி பெலகாவிக்கு சென்றார். தனி விமானத்தில் அங்கு வந்திறங்கிய குமாரசாமியை பெலகாவி மாவட்ட பொறுப்பு மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி வரவேற்றார். அப்போது ரமேஷ் ஜார்கிகோளியின் கன்னத்தை தடவி குமாரசாமி அன்பை வெளிப்படுத்தினார்.

அங்கு லட்சுமி ஹெப்பால்கர் எம்.எல்.ஏ.வும் முதல்-மந்திரியை வரவேற்றார். அதைத்தொடர்ந்து முதல்-மந்திரியின் காரில் லட்சுமி ஹெப்பால்கர் சென்றார். மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி தனது காரில் ெசன்றார்.

அருகருகே அமர்ந்து பேசினர்

அதைத்தொடர்ந்து பெலகாவியில் நடைபெற்ற கர்நாடக சட்ட சங்க கல்வி நிறுவன பவள விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முதல்-மந்திரி குமாரசாமி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்பட பலர் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் முன் பகுதி இருக்கையில், கருத்து மோதலில் ஈடுபட்டு வரும் சதீஸ் ஜார்கிகோளி மற்றும் லட்சுமி ஹெப்பால்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் அருகருகே அமர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். கடும் மோதலுக்கு மத்தியிலும் இருவரும் பேசிக்கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Next Story