சுகாதாரத்தை பேணிக்காக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் - கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்


சுகாதாரத்தை பேணிக்காக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் - கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்
x
தினத்தந்தி 16 Sept 2018 4:15 AM IST (Updated: 16 Sept 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

தவளக்குப்பம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கவர்னர் கிரண்பெடி புதுவை மாநிலத்தில் சுகாதாரத்தை பேணிக்காக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாகூர்,

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் ஒவ்வொரு பகுதியாக சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வில் தூய்மை, நிலத்தடி நீர் சேகரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலையில் கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்ட அவர் தவளக்குப்பத்தில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு உள்ள ஊழியர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். பூரணாங்குப்பம், புதுக்குப்பம், நல்லவாடு, தானாம்பாளையம், ஆண்டியார்பாளையம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆய்வு பணியின் போது அந்த பகுதியில் குப்பைகள் தூய்மையாக அகற்றப்பட்டு இருப்பதை பார்த்த கவர்னர் கிரண்பெடி மகிழ்ச்சி அடைந்தார். மேலும் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கலியமூர்த்திக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து எடுத்து கூறி அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும். சுகாதாரத்தை பேணிக்காக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறினார். பின்னர் அங்கிருந்து அவர் புறப்பட்டு கவர்னர் மாளிகைக்கு திரும்பினார்.

இதே போல் புதுவை மாவட்ட கலெக்டர் சவுத்ரி அபிஜித் விஜய் நகர பகுதியில் சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டார். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய அவர் வழுதாவூர் சாலை, கொக்குபார்க், கிழக்கு கடற்கரை சாலை, முத்தியால்பேட்டை, காந்தி வீதி, அண்ணாசாலை, காமராஜர் சாலை, ராஜீவ்காந்தி சிலை வழியாக கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றார்.

அவர் செல்லும் வழியில் சில இடங்களில் கழிவுநீர் தேங்கியிருப்பதையும், குப்பைகள் தேங்கி கிடந்ததையும் பார்த்து அதனை உடனடியாக அகற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் காலிமனைகளில் மழைநீர், கழிவுநீர் தேங்கி கிடந்தால் அந்த மனைகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும், டெங்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Next Story