மின்சாரம் பாய்ந்து வன உயிரினங்கள் இறப்பதாக வழக்கு: மத்திய–மாநில அரசுகளுக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்


மின்சாரம் பாய்ந்து வன உயிரினங்கள் இறப்பதாக வழக்கு: மத்திய–மாநில அரசுகளுக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 15 Sep 2018 11:15 PM GMT (Updated: 15 Sep 2018 7:58 PM GMT)

வனப்பகுதியில் தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகளில் சிக்கி யானைகள் உள்ளிட்ட வன உயிரினங்கள் இறப்பதாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய –மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த மனோஜ் இமானுவேல், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

தேனி மாவட்டம் மேகமலை வனவிலங்கு சரணாலயம் 630 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த சரணாலயம் பெரியார் புலிகள் சரணாலயம் மற்றும் சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தின் மத்தியில் அமைந்துள்ளது. மேகமலையில் புலிகள், யானைகள், சிங்கவால் குரங்கு, காட்டு நாய் என பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

மேகமலை வழியாக பல்வேறு பகுதிகளுக்கு யானைகள் இடம் பெயர்கின்றன. அவ்வாறு யானைகள் இடம் பெயரும்போது மேகமலையில் தாழ்வாக செல்லும் மின் கம்பியில் உரசி மின்சாரம் பாய்ந்து யானைகள் உயிரிழக்கின்றன. சமீபத்தில் மின்சாரம் பாய்ந்து யானைகள் உயிரிழப்பது அதிகரித்து உள்ளது.

பெரியாறு நீர்மின் திட்டத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் மேகமலை வழியாக உயர் அழுத்த மின் கம்பிகள் வழியாக நெல்லை மாவட்டத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த மின் கம்பிகள் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருப்பதால் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதில் சிக்கி யானைகள் உயிரிழக்கின்றன. வனப்பகுதியில் 20 முதல் 30 அடி உயரத்தில் தான் மின் கம்பிகள் செல்ல வேண்டும் என்பது தேசிய வன விலங்கு வாரியத்தின் விதி. ஆனால் இந்த விதிகளுக்கு முரணாக வனப்பகுதியில் தாழ்வாக மின் கம்பிகள் செல்கின்றன.

எனவே யானைகள் உயிரிழப்பு குறித்து விசாரிக்கவும், அடர்ந்த வனம், வன விலங்கு சரணாலயம், புலிகள் சரணாலயம், தேசிய பூங்காக்களில் யானைகள் மற்றும் வன விலங்குகள் உயிரிழப்பை தடுக்க உயர் அழுத்த மின் கம்பிகளை அதிக உயரத்தில் கொண்டு செல்லவோ அல்லது தரையில் பதித்து செல்லவோ நடவடிக்கை எடுக்க வனத்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை வருகிற 17–ந்தேதிக்கு (நாளை) ஒத்திவைத்தனர்.


Next Story