மதுரை அருகே வீட்டில் அச்சடித்த ரூ.6¾ லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல், 5 பேர் சிக்கினர்
மதுரை அருகே வீட்டில் அச்சடித்த ரூ.6¾ லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் நாகர்கோவிலை சேர்ந்தவர் உள்பட 5 பேர் போலீசாரிடம் சிக்கினர்.
மதுரை,
மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை அடுத்த விளத்தூரில் ஒரு வீட்டில் கள்ள நோட்டு அச்சடிப்பதாக மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது.
அதன் பேரில் தனிப்படை சப்–இன்ஸ்பெக்டர் ஸ்டீபன்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு வீட்டிற்குள் சென்று சோதனை செய்தனர். அப்போது ஒரு அறையில் கட்டுக்கட்டாக 2000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. மேலும் மற்றொரு அறையில் கம்ப்யூட்டர் உபகரணங்கள், நோட்டு அடிக்கும் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இருந்தன. அவைகள் அனைத்தையும் போலீசார் கைப்பற்றினார்கள்.
மேலும் அந்த வீட்டில் 5 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் நாகர்கோவிலை சேர்ந்த தங்கராஜ்(வயது 66) தலைமையில், வண்டியூரை சேர்ந்த அர்ஜூன்(48), அண்ணாத்துரை(24), விரகனூர் போஸ்(55), செல்லூர் ராஜ்மோகன்(60) ஆகியோர் தான் கள்ள நோட்டுகளை அந்த வீட்டில் இருந்து அச்சடித்தது தெரியவந்தது. மேலும் இவர்கள் எத்தனை நாட்கள் அங்கு தங்கி இருந்து இந்த வேலை செய்து வந்தார்கள்.
மொத்தம் எவ்வளவு லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் வெளியே புழக்கத்தில் விட்டுள்ளனர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையில் வீட்டில் இருந்த ரூபாய் நோட்டுகளை எண்ணி பார்த்த போது ரூ.6 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் அச்சடித்து இருந்தது தெரியவந்தது.