கோத்தகிரி அருகே டேன்டீ தொழிற்சாலையை முற்றுகையிட்டு பெண் தொழிலாளர்கள் போராட்டம்


கோத்தகிரி அருகே டேன்டீ தொழிற்சாலையை முற்றுகையிட்டு பெண் தொழிலாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 16 Sept 2018 4:15 AM IST (Updated: 16 Sept 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே டேன்டீ தொழிற்சாலையை முற்றுகையிட்டு பெண் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே குயின்சோலையில் அரசு தேயிலை தோட்டக்கழகத்துக்கு(டேன்டீ) சொந்தமான தேயிலை தோட்டங்களும், தொழிற்சாலையும் உள்ளது. அதில் 300–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நிர்வாகம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி தொழிலாளர்களுக்கு தாமதமாக சம்பளம் வழங்கப்படுவதுடன், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்களும் தரப்படாமல் நிலுவையில் உள்ளது. மேலும் தேயிலை தோட்டங்கள் முறையாக பராமரிக்கப்படாமலும், தொழிலாளர்களின் குடியிருப்புகள் பழுதடைந்தும் கிடக்கின்றன. இதற்கிடையே அரசு தேயிலை தோட்டக்கழகத்தை மேம்படுத்த கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசு ரூ.40 கோடி நிதி ஒதுக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

குயின்சோலை சரகத்துக்கு உட்பட்ட கூடஹல்லா, பரவக்காடு, கர்சன்வேலி ஆகிய இடங்களில் 170 ஹெக்டேரில் தேயிலை தோட்டம் உள்ளது. கடந்த 10–ந் தேதி அந்த தோட்டத்தில் இருந்து பறித்த பச்சை தேயிலையில் 480 கிலோ தரமில்லாதது எனக்கூறி தொழிற்சாலை அதிகாரிகள் அதனை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த 480 கிலோ பச்சை தேயிலையை தொழிலாளர்கள் தரம் பிரித்து மீண்டும் தொழிற்சாலைக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் அதனை ஏற்காமல், வீணான பச்சை தேயிலைக்கு ஈடு கட்டும் வகையில் தொழிலாளர்களுக்கு மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் ஹரிபிரசாத் என்பவருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அந்த தொகை சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில் மேற்பார்வையாளருக்கு அபராதம் விதித்ததை கண்டித்து நேற்று காலை 8 மணியளவில் 100–க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். மேலும் குயின்சோலை டேன்டீ தொழிற்சாலையை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து தொழிலாளர்களுடன், டேன்டீ கோட்ட மேலாளர் விக்ரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மேற்பார்வையாளருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை கேட்டறிந்த டேன்டீ கோட்ட மேலாளர், தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து பொது மேலாளருக்கு தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதில் சமாதானம் அடைந்த தொழிலாளர்கள் காலை 10.30 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு, மீண்டும் பணிக்கு திரும்பினர்.


Next Story