பல்லடம் அருகே 18½ கிலோ கஞ்சா பறிமுதல் - ஒடிசா வாலிபர் கைது


பல்லடம் அருகே 18½ கிலோ கஞ்சா பறிமுதல் - ஒடிசா வாலிபர் கைது
x
தினத்தந்தி 16 Sept 2018 4:15 AM IST (Updated: 16 Sept 2018 3:02 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே 18½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒடிசா வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பல்லடம்,

பல்லடம் அருகே சின்னூர் பிரிவு பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பல்லடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சின்னூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் வடமாநில வாலிபர் ஒருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்தார். உடனே அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணநாயக் (வயது 32) என்பதும், அதே பகுதியில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும் ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும், அவற்றை கடந்த 2 மாதமாக பல்லடம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதைதொடர்ந்து கிருஷ்ணநாயக் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 18½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கிருஷ்ணநாயக் பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story