காக்களூர் ஏரியில் 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு


காக்களூர் ஏரியில் 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு
x
தினத்தந்தி 16 Sept 2018 3:45 AM IST (Updated: 16 Sept 2018 3:03 AM IST)
t-max-icont-min-icon

காக்களூர் ஏரியில் 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

திருவள்ளூர்,

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 13-ந் தேதி கொண்டாடப்பட்டது. அப்போது திரளான பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பை சேர்ந்த சிலை அமைப்பாளர்கள் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வகையான விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

இந்த நிலையில் நேற்று விநாயகர் சிலை ஊர்வலம் திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் நடைபெற்றது. திருவள்ளூர், காக்களூர், ஈக்காடு, புட்லூர், செவ்வாப்பேட்டை, மணவாளநகர், வேப்பம்பட்டு, திருப்பாச்சூர், கடம்பத்தூர், பேரம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் வழிபட்ட விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக வாகனங்களில் கொண்டு வந்து ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றனர். பின்னர் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.

ஏரியில் கரைப்பு

இதற்கு இந்து முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் வினோத்கண்ணா தலைமை தாங்கினார். இந்து முன்னணியின் காஞ்சீபுரம் கோட்ட செயலாளர் மணி, பா.ஜ.க. திருவள்ளூர் மாவட்ட தலைவர் லோகநாதன், பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் வ.பாலா என்கிற பாலயோகி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த விநாயகர் சிலை ஊர்வலமானது ஆயில்மில் பகுதியில் இருந்து வாணவேடிக்கை, மேளதாளத்துடன், ஜே.என்.ரோடு, பஸ் நிலையம், தேரடி வழியாக வந்து முடிவில் காக்களூர் ஏரியை அடைந்தது.

அங்கு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. இந்த விழாவில் இந்து முன்னணி நிர்வாகிகள் பாலாஜி, கருணாகரன், ராஜ்குமார், வி.எஸ்.ரகுராமன், கீதாஞ்சலி சம்பத் மற்றும் பல்வேறு இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story