மணல் கடத்திய 3 பேர் கைது


மணல் கடத்திய 3 பேர் கைது
x
தினத்தந்தி 15 Sep 2018 9:39 PM GMT (Updated: 15 Sep 2018 9:39 PM GMT)

மணல் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே கோளிவாக்கம் பாலாற்று பகுதிகளில் மாட்டு வண்டியில் மணல் கடத்துவதாக காஞ்சீபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது மாட்டு வண்டியில் மணல் கடத்திய கோளிவாக்கத்தை சேர்ந்த செல்வம் (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் சின்னயங்குளம் பாலாற்றுப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்த சின்னயங்குளம் இந்திரா நகரை சேர்ந்த பூபாலன் (21) என்பவரை காஞ்சீபுரம் தாலுகா போலீசார் கைது செய்தனர்.

சேலை பகுதியில்

திருவள்ளூர் தாலுகா போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூரை அடுத்த சேலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த 3 பேர் போலீசாரை பார்த்ததும் மாட்டு வண்டிகளை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். போலீசார் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீராபுரம்

திருக்கழுக்குன்றத்தை அடுத்த வீராபுரம் ஏரி ஓடையில் மாட்டு வண்டிகளில் சிலர் மணல் கடத்துவதாக திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று காலை 8½ மணியளவில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அந்த இடத்தில் சோதனை நடத்தினர். இதில் அதே பகுதியை சேர்ந்த சிவானந்தம் (40) என்பவர் தனது மாட்டு வண்டியில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவானந்தத்தை கைது செய்தனர்.

Next Story