விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம்: திருப்பூரில் இன்று போக்குவரத்து மாற்றம்


விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம்: திருப்பூரில் இன்று போக்குவரத்து மாற்றம்
x
தினத்தந்தி 16 Sept 2018 4:00 AM IST (Updated: 16 Sept 2018 5:15 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடைபெறுவதால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) திருப்பூர் மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்து போலீசார் அறிவித்துள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாநகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நடைபெற உள்ளது. இதையொட்டி மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலம் தொடங்கி கண்ணகி நகர், எம்.எஸ்.நகர், கொங்கு மெயின் ரோடு, எல்.ஆர்.ஜி. காம்பவுண்டு, லட்சுமி நகர் சந்திப்பு, மில்லர் பஸ் நிறுத்தம், புஷ்பா தியேட்டர் சந்திப்பு, மேம்பாலம், டவுன்ஹால் வழியாக ஆலங்காட்டில் ஊர்வலம் நிறைவடையும்.

எனவே அனைத்து ரக சரக்கு வாகனங்களும் இன்று காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை திருப்பூர் மாநகரத்துக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலை ஊர்வலம் கோவை டிபார்ட்மெண்ட் ஸ்டோர் அருகில் இருந்து புறப்பட்டு புதிய பஸ் நிலையம் செல்லும் வரை அவினாசியில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் திருமுருகன்பூண்டியில் இருந்து பூலுவப்பட்டி வழியாக புதிய பஸ் நிலையத்துக்கு வர வேண்டும்.

மதியம் 12 மணி முதல் அவினாசி சாலையில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கு வரும் அனைத்து பஸ்களும் புஷ்பா தியேட்டர் சந்திப்பு மற்றும் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக சந்திப்பில் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும். பெருமாநல்லூர் சாலையில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கு வரும் அனைத்து பஸ்களும் பூலுவப்பட்டி சந்திப்பில் திருப்பி விடப்பட்டு திருமுருகன்பூண்டி ரிங் ரோடு வழியாக அவினாசி சாலையை அடைந்து வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சந்திப்பு மற்றும் புஷ்பா தியேட்டர் சந்திப்பில் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும்.

பெருமாநல்லூர் சாலையில் இருந்து புதிய பஸ் நிலையம் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் மதியம் 1 மணி முதல் பூலுவப்பட்டி நால் ரோட்டில் இருந்து திருமுருகன்பூண்டி மற்றும் வாவிபாளையம் சாலையில் திருப்பி விடப்படும். புதிய பஸ் நிலையத்துக்கு முன்பு விநாயகர் சிலைகள் அனைத்தும் வந்ததும் இலகுரக வாகனங்கள் மற்றும் மற்ற வாகனங்கள் போயம்பாளையம் பிரிவு, பிச்சம்பாளையம் பிரிவு, சக்தி தியேட்டர் ரோடு, காட்டன் மில் ரோடு வழியாக திருப்பி விடப்படும். அதுபோல் 60 அடி சாலை வழியாக புதிய பஸ் நிலையம் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் 60 அடி ரோடு கே.வி.பி.சந்திப்பில் இருந்து புஷ்பா தியேட்டர் சந்திப்பு நோக்கி திருப்பி விடப்படும்.

விநாயகர் சிலை ஊர்வலம் மில்லர் பஸ் நிறுத்தத்தை அடைந்ததும், பெருமாநல்லூர் சாலையில் இருந்து புஷ்பா தியேட்டர் சந்திப்பு நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் 60 அடி ரோடு கே.வி.பி. சந்திப்பு வழியாக வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக சந்திப்புக்கு திருப்பி விடப்படும். ஊர்வலம் மில்லர் பஸ் நிறுத்தத்தில் இருந்து புஷ்பா தியேட்டர் சந்திப்பு நோக்கி செல்லும்போது அவினாசி சாலையில் வரும் வாகனங்கள் அனைத்தும் கீரணி சந்திப்பில் இருந்து தற்காலிக ஒரு வழிப்பாதையில் புஷ்பா தியேட்டர் சந்திப்பு வழியாக காலேஜ் ரோட்டில் திருப்பி விடப்படும்.

விநாயகர் சிலை ஊர்வலம் டவுன்ஹால் வந்ததும் மாநகராட்சி சந்திப்பில் இருந்து தாடிக்காரன் முக்கு நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் எம்.ஜி.ஆர்.சிலை சந்திப்பு நோக்கி திருப்பி விடப்படும். பார்க் ரோடு வழியாக டவுன்ஹால் செல்லும் வாகனங்கள் எம்.ஜி.ஆர்.சிலை சந்திப்பில் இருந்து குமரன் சாலை வழியாக தற்காலிக ஒரு வழிப்பாதையில் திருப்பி விடப்படும். மங்கலம் சாலையில் இருந்து தாடிக்காரன் முக்கு நடராஜ் தியேட்டர் வழியாக டவுன்ஹால் நோக்கி வரும் வாகனங்கள் தாடிக்காரன் முக்கில் இருந்து ஏ.பி.டி. சாலை வழியாக திருப்பி விடப்படும்.

இதுபோல் வெள்ளியங்காட்டில் இருந்து தொடங்கும் விநாயகர் சிலை ஊர்வலம் புதூர் பிரிவு சந்திப்பு, கரட்டாங்காடு, பெரிச்சிப்பாளையம், வெள்ளியங்காடு நால்ரோடு சந்திப்பு, முத்தையன் கோவில், காட்டுவளவு சந்திப்பு, பல்லடம் ரோடு, பழைய பஸ் நிலையம், புதுமார்க்கெட் வீதி, மாநகராட்சி சந்திப்பு வழியாக தாடிக்காரன் முக்கு, ஆலங்காட்டில் நிறைவடையும்.

இந்த ஊர்வலத்துக்காக தாராபுரம் சாலையில் இருந்து திருப்பூர் நோக்கி வரும் அனைத்து கனரக வாகனங்களும் மதியம் 1 மணி முதல் கோவில்வழியில் முத்தனம்பாளையம் சாலை வழியாக திருப்பி விடப்படும். வெள்ளியங்காடு வளைவு பகுதியில் ஊர்வலம் தொடங்கியதும் அனைத்து வாகனங்களும் பலவஞ்சிப்பாளையம் பிரிவில் இருந்து வீரபாண்டி பிரிவு நோக்கி திருப்பி விடப்படும். ஊர்வலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து மாநகராட்சி சந்திப்பு நோக்கி வரும்போது குமரன் சாலையில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் எம்.ஜி.ஆர். சிலையில் இருந்து யுனிவர்செல் தியேட்டர் சாலை வழியாக ராஜிவ்நகருக்கு திருப்பி விடப்படும். எம்.ஜி.பி. ஷோரூம் சாலையில் இருந்து மாநகராட்சி சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் எம்.ஜி.ஆர். சிலை நோக்கி திருப்பி விடப்படும்.

ஆலங்காடு பகுதியில் இன்று இரவு பொதுக்கூட்டம் நடைபெறும்போது நடராஜ் தியேட்டர் சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. மாநகராட்சி சந்திப்பு வழியாக தாடிக்காரன் முக்கு நோக்கி வரும் வாகனங்கள் ஏ.பி.டி. ரோடு வழியாக திருப்பி விடப்படும். ஏ.பி.டி. சாலையில் இருந்து தாடிக்காரன் முக்கு வழியாக டவுன்ஹால் நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஏ.பி.டி. ரோடு வழியாக மாநகராட்சி சந்திப்பு சாலை நோக்கி ஒரு வழிப்பாதையில் தற்காலிகமாக திருப்பி விடப்படும். மங்கலம் சாலை வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் கருவம்பாளையம் வழியாக ஏ.பி.டி.ரோட்டுக்கு திருப்பி விடப்படும்.

இந்த தகவலை திருப்பூர் மாநகர போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.



Next Story