வேலூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கிய தொழிலாளி கதி என்ன?


வேலூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கிய தொழிலாளி கதி என்ன?
x
தினத்தந்தி 15 Sep 2018 10:16 PM GMT (Updated: 15 Sep 2018 10:16 PM GMT)

கல்குவாரி குட்டையில் மூழ்கிய தொழிலாளியின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. அவரை 2-வது நாளாக தீயணைப்பு, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.

வேலூர்,

ஆற்காடு அருகே உள்ள முப்பதுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 41). மரம் வெட்டும் தொழிலாளி. இவர் தனது குடும்பத்துடன் அரியூரை அடுத்துள்ள ஆவாரம்பாளையம் கல்குவாரி அருகே தங்கி, மரம் வெட்டும் தொழில் செய்து வந்தார். இவருடன் அதேபகுதியை சேர்ந்தவர்களும் மரம் வெட்டும் தொழில் செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மரம் வெட்டுவதற்காக குமார் சக தொழிலாளிகளுடன் சென்றார்.

நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் அவர் குளிப்பதற்காக அங்குள்ள கல்குவாரி குட்டைக்கு சென்றார். அவருடன் சக தொழிலாளர்களும் சென்றனர். அங்கு அவரது மனைவியும் துணி துவைத்துக் கொண்டிருந்தார். குமார் தண்ணீரில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். அவர் குட்டையின் ஆழமான பகுதிக்கு சென்றபோது திடீரென தண்ணீரில் மூழ்கினார்.

2-வது நாளாக தேடும் பணி

அவருக்கு நீச்சல் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இதைப்பார்த்த அவரது மனைவி மற்றும் சகதொழிலாளர்கள் இதுகுறித்து அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே தகவல் அறிந்த வேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விநாயகம் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து குட்டையில் மூழ்கிய குமாரை, உள்ளே இறங்கி தேடிப்பார்த்தனர். எனினும் அவர் கிடைக்கவில்லை. இரவு 7 மணி வரை குமாரை தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். இருள் சூழ்ந்ததால் தேடும் பணியை கைவிட்டனர். அவரது கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று காலை 6 மணிக்கு மீண்டும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களும் தொடர்ந்து குமாரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story