ஓய்வு பெற்ற சர்க்கரை ஆலை ஊழியரிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றிக்கொடுத்து ரூ.35 ஆயிரம் அபேஸ்
செய்யாறில் சர்க்கரை ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவரிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றிக்கொடுத்த மர்ம நபர் அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.35 ஆயிரம் அபேஸ் செய்து விட்டு தப்பினார்.
செய்யாறு,
செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஜின்னா (வயது 62). இவர், நேற்று முன்தினம் செய்யாறு டவுன் காசிக்காரத் தெருவில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் இரவு 7½ மணி அளவில் ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் கார்டு சரியாக பொருந்தாததால் மீண்டும், மீண்டும் எந்திரத்தில் கார்டினை செலுத்தியுள்ளார்.
அப்போது பின்னால் நின்று கொண்டிருந்த 4 பேரில் ஒருவர் ஜின்னாவிடம் ஏ.டி.எம். கார்டை வாங்கி எந்திரத்தில் செலுத்தியபோது வேலை செய்து உள்ளது. இதனையடுத்து அவர், ஜின்னாவிடம் ரகசிய எண்ணை கேட்டார். ஆனால் அவர் அந்த எண்ணை அவரிடம் தெரிவிக்காமல் தானாகவே ரகசிய எண்களை பதிவு செய்தார். இதனை மர்மநபர் கவனித்துள்ளார்.
ரூ.35 ஆயிரம் அபேஸ்
பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து ரூ.3 ஆயிரம் எடுத்து கொடுக்கும் போது ஜின்னாவிடம் அவரது ஏ.டி.எம். கார்டுக்கு பதிலாக வேறு ஒருவரின் கார்டை கொடுத்து அனுப்பியுள்ளார். இதனை கவனிக்காமல் அவர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் இரவு நேரத்தில் ஜின்னாவின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வந்துள்ளது. அதில் வங்கியின் கணக்கில் இருந்து ரூ.35 ஆயிரம் எடுத்துள்ளதாக வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதைத் தொடர்ந்து வங்கியின் ஏ.டி.எம். கார்டினை பார்த்தபோது தன்னுடைய கார்டு இல்லை என்பது தெரியவந்தது.
இதுகுறித்து வங்கிக்கு தகவல் கொடுத்து ஏ.டி.எம். கார்டினை செயலிழக்கம் செய்தார். மேலும் இதுகுறித்து ஜின்னா செய்யாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story