விநாயகர் சிலை ஊர்வலம் ஊருக்குள் செல்ல அனுமதி மறுப்பு போலீசாருடன் எச்.ராஜா வாக்குவாதம்


விநாயகர் சிலை ஊர்வலம் ஊருக்குள் செல்ல அனுமதி மறுப்பு போலீசாருடன் எச்.ராஜா வாக்குவாதம்
x

திருமயம் அருகே விநாயகர் சிலை ஊர்வலம் ஊருக்குள் செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் போலீசாருடன் எச்.ராஜா வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருமயம்,

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கே.பள்ளிவாசல் மெய்யபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்காக இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து மெய்யபுரம் மகாமுத்து மாரியம்மன் கோவில் முன்பு விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதையடுத்து நேற்று மதியம் 2 மணிக்கு விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தொடங்கி வைத்தார்.

இதையடுத்து மெய்யபுரம் ஊருக்குள் வீதிகளில் விநாயகர் சிலைகளுடன் ஊர்வலமாக செல்ல பொதுமக்கள் முயன்றனர். ஆனால் விநாயகர் சிலை ஊர்வலம் ஊருக்குள் செல்லக்கூடாது என போலீசார் இரும்பு தடுப்புகள் போட்டு தடுத்து நிறுத்தினர். இதற்கு எச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது போலீசாரை கண்டித்து, மதுரை-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், வருவாய் அதிகாரி கோகிலா மற்றும் போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஊர்வலம் ஊருக்குள் செல்ல போலீசார் அனுமதி வழங்கினர்.

இதையடுத்து விநாயகர் சிலை மெய்யபுரத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு, மெய்யபுரத்தில் உள்ள குளத்தில் கரைக்கப்பட்டது. அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஊர்வலத்தில் எச்.ராஜா பேசுகையில், “மெய்யபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவதற்கு போலீசார் அனுமதி அளிக்காதது அதிர்ச்சியை அளிக்கிறது. இங்கு நான் நின்று பேசுவதற்கான மேடையை போடக்கூடாது என்று திருமயம் போலீசார் பொதுமக்களை மிரட்டி உள்ளனர். என்னை எதிரியாக பார்க்கின்றார்கள். நாங்கள் இதுவரை ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நினைத்து கொண்டிருந்தோம். தற்போது போலீசார் எதிர்க்க சொல்கின்றனர். இனி எதிர்த்து நின்று பார்ப்போம்” என்றார்.

Next Story