மலையில் ஏறி மலைக்கவைக்கும் ஆசிரியை


மலையில் ஏறி மலைக்கவைக்கும் ஆசிரியை
x
தினத்தந்தி 16 Sept 2018 3:03 PM IST (Updated: 16 Sept 2018 3:03 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் பயணம், படகு சவாரி, நடை பயணம் என மூன்று விதமாக பயணம் மேற்கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தி வருகிறார், உஷாகுமாரி.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள அம்புரி கிராமத்தை சேர்ந்த இவர், குன்னதுமலா பகுதியிலுள்ள மலைக்கிராம பள்ளியில் 16 ஆண்டுகளாக ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார்.

நான்காம் வகுப்பு வரை இருக்கும் அந்த பள்ளிக்கு உஷாகுமாரி மட்டும் தான் ஆசிரியை. 14 மாணவ-மாணவிகள் இவரிடம் பாடம் பயில்கிறார்கள். உஷாகுமாரியின் அன்றாட பள்ளிப் பயணம் காலை 7.30 மணிக்கு தொடங்கி விடுகிறது. தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கும்பிக்கா காவடு என்ற ஆற்றுப் பகுதிக்கு செல்கிறார். அங்கிருந்து ஆற்றின் மறுகரைக்கு செல்ல படகை பயன்படுத்துகிறார். அந்த சிறிய படகை உஷாகுமாரியே ஓட்டுகிறார்.

அவர் படகில் மறு கரைக்கு சென்றடையும் வேளையில் அங்கு சில மாணவ-மாணவிகள் அவருடைய வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அவர்களுடன் காட்டு பாதை வழியாக பள்ளிக்கூடத்தை நோக்கி பயணிக்கிறார். பாறைகள், புதர்கள், ஒற்றையடி பாதை என உஷாகுமாரியின் நடைப்பயணம் கடினமானதாக இருக்கிறது. சில இடங்களில் மலைப்பாதையை கடப்பதற்கு ஊற்றுகோல் தேவைப்படுகிறது. மாணவ-மாணவிகள் துணையோடு உற்சாகமாக பயணம் மேற்கொண்டு பள்ளிக்கு சென்று பாடம் நடத்தி வருகிறார்.

‘‘மலைப்பகுதியில் வசிக்கும் குழந்தைகளின் பள்ளிப்படிப்பு பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் 1999-ம் ஆண்டு கேரளாவில் ஒரே ஒரு ஆசிரியையை கொண்ட பள்ளிகள் இரண்டு இடங்களில் தொடங்கப்பட்டன. அதில் நான் பாடம் சொல்லிக்கொடுக்கும் பள்ளியும் ஒன்று. ஆரம்பத்தில் பள்ளிக்கென்று கட்டிடம் இல்லாமல் இருந்தது. வீட்டு திண்ணைகளிலும் அகன்ற பாறைகளிலும் மாணவ-மாணவிகளை அமர செய்து பாடம் சொல்லி கொடுத்துவந்தேன். அப்போது மாணவர்கள் யாரும் படிக்க ஆர்வம் காட்டவில்லை. அவர்களுடைய பெற்றோரும், பிள்ளைகள் கல்வியை பெற வேண்டும் என்று விரும்பவில்லை. விவசாய பணிகளில்தான் தங்கள் பிள்ளைகளை ஈடுபடுத்திக்கொண்டிருந்தார்கள். நான் அவர்களிடம் சென்று கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கி கூறினேன். யாரும் காது கொடுத்து கேட்கவில்லை.



பின்பு பஞ்சாயத்து சார்பில் இரண்டு கட்டிடங்கள் கட்டிக்கொடுத்தார்கள். கடும் போராட்டத்திற்கு பிறகு மாணவர்களை ஒவ்வொருவராக பள்ளிக்கு அழைத்துவந்தேன். இந்த ஆண்டு தொடக்கத்தில் 11 பேர் படித்தார்கள். இப்போது 3 பேர் புதிதாக சேர்ந்திருக்கிறார்கள்’’ என்கிறார்.

உஷாகுமாரி பள்ளிக்கூடம் முடிந்து மீண்டும் நடந்து, படகில் ஏறி, பைக்கில் பயணித்து இரவில் 8 மணி அளவில்தான் வீடு திரும்புகிறார். மழைக்காலங்களில் பள்ளிக்கு செல்வது சவாலான விஷயமாக இருக்கிறது என்கிறார். தொடர்ந்து மழை பெய்யும் சமயங்களில் வீடு திரும்பாமல் பள்ளி மாணவர் ஒருவருடைய வீட்டிலேயே தங்கி விடுகிறார். தன்னால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியையாக மட்டுமல்லாமல் மாணவர்கள் நலனில் அக்கறை கொள்ளும் நலம் விரும்பியாகவும் செயல்பட்டு வருகிறார். மதிய உணவுடன் பால், முட்டையும் வழங்கி வருகிறார். அவருக்கு கல்லூரி நிர்வாகம் ஒன்றும் உதவிக்கரம் நீட்டுகிறது.

கணக்கு, ஆங்கிலம், மொழிப்பாடம், சுற்றுச்சூழல் என அனைத்து பாடங்களையும் கற்றுக்கொடுப்பதோடு மாணவர்களின் தனித்திறமைகளையும் ஊக்கப்படுத்தி வருகிறார்.

‘‘நான் 16 ஆண்டுகளாக இந்த பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன். ஆரம்பத்தில் மாணவர்கள் படிப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. புத்தகங்களை கொடுத்தால் அவைகளை எரித்துவிடுவார்கள். வீடு வீடாக சென்று மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் பேசி படிப்பை தொடர வைத்தேன். இப்போது நிறைய பேர் இங்கு தொடக்கக்கல்வியை முடித்துவிட்டு நகர்பகுதிக்கு சென்று பள்ளிப்படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நான் பள்ளிக்கூடம் சென்றுவிட்டு வீடு திரும்புவதற்கு தினமும் பல மணி நேரத்தை செலவிட வேண்டியிருக்கிறது. காட்டுக்குள் நடைப்பயணமாக சில கிலோ மீட்டர் தூரம் நடந்தும் செல்ல வேண்டியிருக்கிறது. ‘இப்படி தனியாக செல்ல வேண்டியிருக்கிறதே?’ என்று ஒருநாளும் நான் பயப்பட்டதில்லை. எனக்கு இயற்கையை நேசிப்பது ரொம்ப பிடிக்கும். காட்டுக்குள் நிலவும் அமைதியான சூழல் என் நடைப்பயணத்தை இதமாக்குகிறது’’ என்கிறார்.

இந்த மலைக்கிராம பள்ளியில் படித்துவிட்டு நகர்பகுதியில் படிப்பை தொடரும் மாணவர்களில் பெரும்பாலானோர் 10-ம் வகுப்புக்கு பிறகு படிப்பை நிறுத்திவிடுகிறார்கள். மாணவிகளே கல்லூரி படிப்பு வரை தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். அதற்கு விடுதி வசதி இல்லாததே காரணம் என்கிறார், உஷாகுமாரி.

‘‘பெண்களுக்கு விடுதி வசதி இருப்பதால் அவர்கள் படிப்புக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால் மாணவர்களுக்கு விடுதி இல்லாததால் மீண்டும் பெற்றோர் வழியிலேயே வேலைக்கு போய் விடுகிறார்கள்’’ என்று ஆதங்கப்படுகிறார்.

தான் ஒருவரே அனைத்து மாணவர்களுக்கும் பாடம் எடுப்பதும், அவர்களை கவனித்துக்கொள்வதும் சவாலான விஷயமாக இருக்கிறது என்கிறார். உஷாகுமாரிக்கு சில சமயங்களில் மூன்று, நான்கு மாதங்கள் கழித்தே சம்பள பணம் கைக்கு கிடைக்கிறது. எனினும் தன் சொந்த பணத்தில் இருந்து மாணவர்களுக்கு பால், முட்டை வாங்கிக் கொடுக்க அவர் தவறுவதில்லை. 

Next Story