கடைமடை பகுதிக்கு தண்ணீர் விடக்கோரி சாலை மறியல்


கடைமடை பகுதிக்கு தண்ணீர் விடக்கோரி சாலை மறியல்
x
தினத்தந்தி 17 Sept 2018 3:00 AM IST (Updated: 17 Sept 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

கருகும் பயிர்களை காப்பாற்ற கடைமடை பகுதிக்கு தண்ணீர் விடக்கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் வேளாங்கண்ணி அருகே சாலை மறியல் நடைபெற்றது.

வேளாங்கண்ணி, 


நாகை மாவட்ட கடைமடை பகுதியில் கருகும் பயிர்களை காப்பாற்ற உடனடியாக போதிய அளவு தண்ணீர் திறந்து விடக்கோரி வேளாங் கண்ணி அருகே உள்ள மேலப்பிடாகை கடைத்தெருவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாநிலக்குழு உறுப்பினருமான மாரிமுத்து தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துபெருமாள், விவசாய ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து கூறியதாவது:-

மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீரை நம்பி இந்த ஆண்டு சம்பா சாகுபடியை கடைமடை விவசாயிகள் மிகவும் ஆர்வத்துடன் தொடங்கினர். ஆனால் திருச்சி முக்கொம்பு அணையில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக கடைமடை பகுதியான நாகைக்கு காவிரி நீர் சரிவர வந்து சேரவில்லை. இதனால் கீழையூர், தலைஞாயிறு, எட்டுக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சம்பா பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

கீழையூர், ஈசனூர், வெண்மணச்சேரி, மடப்புரம், வாழக்கரை ஆகிய இடங்களில் விதைத்து 25 நாட்களான நாற்றுகளுக்கு களைக்கொல்லி மருந்துகளை விவசாயிகள் தெளித்துள்ளனர். களைக்கொல்லி மருந்து தெளித்த 5 நாட்களுக்குள் பயிர்களுக்கு தண்ணீர் விட வேண்டும். ஆனால் இதுவரை தண்ணீர் கிடைக்காத காரணத்தால் பயிர்கள் கருகி வருகின்றன.

பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் நீர்நிலைகள் மற்றும் குளங்களில் தேங்கியுள்ள தண்ணீரை மோட்டார் என்ஜின் மூலம் இறைத்து சில விவசாயிகள் பயிரை காப்பாற்றி வருகின்றனர். எனவே கருகும் பயிர்களை காப்பாற்ற உடனடியாக தண்ணீர் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த வெண்ணாறு கோட்ட உதவி செயற்பொறியாளர் பாண்டியன், சுரேந்திரன், திருக்குவளை தனி தாசில்தார் விஜயகுமார், கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் படிப்படியாக தண்ணீரை அதிகப்படுத்தி வழங்குவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதன்பேரில் விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டனர். 

Next Story