மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்த இருந்த 150 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்


மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்த இருந்த 150 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 17 Sept 2018 4:00 AM IST (Updated: 17 Sept 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

இலங்கைக்கு கடத்துவதற்காக பிடித்து வரப்பட்ட 150 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் டால்பின், கடல் அட்டை, கடல் குதிரை, கடல் பசு உள்ளிட்ட பல அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. கடல் அட்டை, டால்பின், கடல்குதிரை என பல அரிய கடல் வாழ் உயிரினங்களை பிடிப்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

கடல் அட்டைகளை பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தாலும் ராமேசுவரம், மண்டபம், வேதாளை உள்ளிட்ட பல இடங்களில் சிலர் கடல் அட்டைகளை பிடித்து வருவது தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

இந்த நிலையில் மண்டபம் பகுதியில் ஒரு படகில் கடல் அட்டைகளை பிடித்து வருவதாக கடலோர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து கடலோர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பெலிக்ஸ்சுரேஷ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் ரோந்து படகில் சென்று படகுகளை கண்காணித்து வந்தனர்.

அப்போது ஆட்களே இல்லாமல் நின்ற ஒரு மீன் பிடி விசைப் படகில் ஏறி சோதனை செய்த போது அந்த படகில் 8 சாக்கு பைகளில் அரசால் தடை செய்யப் பட்ட கடல் அட்டைகள் இருந்தது தெரிய வந்தது.

சுமார் 150 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்த கடலோர போலீசார் அவற்றை போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். தொடர்ந்து அதை பிடித்து வந்தவர்கள் யார், படகின் உரிமையாளர் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் இருக்கும் என தெரிகிறது. இலங்கைக்கு கடத்துவதற்காக பிடித்து வந்திருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

Next Story