அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் எடை, உயரத்தை பெற்றோர்கள் உறுதி செய்யவேண்டும்
அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் எடை, உயரம் குறித்து பெற்றோர்கள் நேரில் சென்று பார்வையிட்டு உறுதி செய்யவேண்டும் என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிவுறுத்தியுள்ளார்.
உத்தமபாளையம்,
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர்கள் முன்னிலையில் எடை, உயரம், பதிவு மற்றும் ஊட்டச்சத்து வழங்கும் வீட்டுக்கு வீடு திருவிழா, உத்தமபாளையத்தை அடுத்துள்ள ராயப்பன்பட்டி அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது.
விழாவை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 1,065 அங்கன்வாடி மையங்களிலும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எடை மற்றும் உயரம் பதிவு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
வளர் இளம்பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து இன்றியமையாததாகும். 5 வயது வரை உள்ள எல்லா குழந்தைகளுக்கும் சத்தான உணவு அஸ்திவாரமாகும். 5 வயது முதல் இறுதி காலம் வரை சிறப்பாக செயல்பட நாம் அளிக்கும் உணவு வகைகள் ஆதாரமாக அமைகிறது. செடிக்கு எப்படி வேர் முக்கியமோ, அதே போல் மூளை வளர்ச்சிக்கு சத்தான உணவு அவசியமாகிறது. ஒரு குழந்தையின் ஆரோக்கியம் எடையில் தான் பிரதிபலிக்கிறது.
அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் எடை, உயரம் குறித்து பெற்றோர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அதனை உறுதி செய்து கொள்ளவேண்டும். குழந்தைகள் எப்படி உள்ளனர் என்பதையும் அறிந்து கொள்ளவேண்டும். பிளாஸ்டிக் பாக்கெட்டினால் அடைக்கப்பட்ட உணவு பொருட்களை குழந்தைகளுக்கு வழங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் அனைத்தும் மக்களின் நலன் கருதியே செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) முதல் அனைத்து பள்ளிகளிலும் உள்ள மாணவ-மாணவிகளின் எடை மற்றும் உயரம் குறித்து பதிவு செய்தல் போன்ற தொடர் பணிகள் நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து பெற்றோர்கள் முன்னிலையில் குழந்தைகளின் எடை மற்றும் உயரங்களை கலெக்டர் அளவீடு செய்தார். தொடர்ந்து எடை, உயரம், பதிவு குறித்த உறுதிமொழியை வாசித்தார். விழாவில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story