பெண்களுக்காக எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு


பெண்களுக்காக எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு
x
தினத்தந்தி 16 Sep 2018 11:15 PM GMT (Updated: 16 Sep 2018 7:49 PM GMT)

பெண்களுக்காக எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது’ என்று கோவையில் நடந்த விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை,

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குனியமுத்தூர், செல்வபுரம், தொண்டாமுத்தூர், பூ மார்க்கெட் ஆகிய பகுதிகளில் 360 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு பேசியதாவது:–

தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியவர் முன்னாள் முதல்– அமைச்சர் ஜெயலலிதா. அவர், பெண்களுக்கும், பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் பல திட்டங்களை செயல்படுத்தி மகளிர் முன்னேற்றத்திற்கு ஏணியாக விளங்கினார்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் உதவித் தொகையுடன் 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டது. பின்னர் அது, 8 கிராம் தங்கமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. அதுபோலவே, தொட்டில் குழந்தை திட்டம், இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம், ஊட்டச்சத்து மாவு வழங்கும் திட்டம், அம்மா குழந்தைகள் நல பரிசுப்பெட்டகம் திட்டம், பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை திட்டம் உள்பட பெண்களுக்காக எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது.

கிராமப்புற, நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய, நடுத்தர பெண்கள் சுயமாக முன்னேறவும், சுயதொழில் செய்து வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ளவும், அவர்கள் மகளிர் சுய உதவிக் குழுதிட்டத்தின் மூலம் கடனுதவி பெற வழிவகை செய்யப்பட்டது. எனவே பெண்களின் நலன் காக்கும் அரசாக தமிழக அரசு திகழ்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் பத்மாவதி, கோட்ட வருவாய் அதிகாரி தனலிங்கம், துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) பானுமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோவை கெம்பட்டி காலனி, சிரியன் சர்ச் சாலை, காட்டூரில் உள்ள சமுதாய கூடங்களில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன்அர்ச்சுனன் ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்கள். இதில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் சி.டி.சி.அப்துல் ஜப்பார், முன்னாள் கவுன்சிலர்கள் காட்டூர் செல்வராஜ், சசிரேகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 2 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.


Next Story