உடுமலை பகுதியில் விலை குறைவால் குப்பையில் கொட்டப்பட்டுள்ள தக்காளி


உடுமலை பகுதியில் விலை குறைவால் குப்பையில் கொட்டப்பட்டுள்ள தக்காளி
x
தினத்தந்தி 17 Sept 2018 4:15 AM IST (Updated: 17 Sept 2018 1:38 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை பகுதியில் விலை குறைவு காரணமாக குப்பையில் தக்காளி பழங்கள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க தக்காளியில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க அரசு உதவ வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தளி,

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் உள்ளன. இந்த அணைகளுக்கு மழைக்காலங்களில் ஆறுகள் மூலமாக நீர்வரத்து ஏற்படுகிறது. அதை அடிப்படையாக கொண்டு கோவை, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகள் கரும்பு, தென்னை, மா, வாழை, கொய்யா, சப்போட்டா, மக்காச்சோளம், கம்பு உள்ளிட்ட பயிர் வகைகளும் பீட்ரூட், அவரை, கத்தரி, தக்காளி போன்ற காய்கறிகளையும் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பாக மேற்கு தொடர்ச்சிமலையில் தென்மேற்கு பருவமழை பெய்தது. இதனால் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. அத்துடன் நிலப்பரப்பிலும் மழை பெய்தது. அதைத் தொடர்ந்து விவசாயிகள் நிலங்களை உழுது சாகுபடி பணிகளைத் தொடங்கினார்கள். அதில் கிணற்றுப் பாசனத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாயிகள் காய்கறிகள் சாகுபடியில் ஆர்வம் காட்டி வந்தனர்.

அந்த வகையில் உடுமலை, தளி, மடத்துக்குளம், குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி சாகுபடி அதிகளவில் செய்யப்பட்டுள்ளது. இதனால் தக்காளி உற்பத்தி அதிகரித்துள்ளதால் அதற்கான விலையும் குறைந்து விட்டது. தற்போது உடுமலை சந்தையில் 15 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ. 60 முதல் ரூ.70 வரை விற்பனையாகிறது.

இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். மேலும் உடுமலை சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்ற தக்காளி முழுவதும் விற்பனையாவதில்லை. இதனால் விவசாயிகள் வேறுவழியின்றி தக்காளியை மற்ற காய்கறி கழிவுகளுடன் சேர்த்து சந்தையின் ஒரு பகுதியில் உள்ள குப்பையில் கொட்டி விட்டு செல்கின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

உடுமலை பகுதியில் தக்காளி உற்பத்தி அதிகளவில் உள்ளதால் அதன் விலையும் சரிந்து விட்டது. இதனால் விவசாயிகள் தக்காளியை பறித்து விற்பனை செய்யமுடியாமல் தவித்து வருகின்றனர். தக்காளி பழம் பறிக்கும் ஆட்களுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியவில்லை. இதனால் தக்காளியை பதப்படுத்தி ஜாம், சாஸ், பவுடர் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதற்கு அரசு உதவ வேண்டும். அதற்கான தொழிற்சாலையை உடுமலை பகுதியில் நிறுவுவதற்கும் முன்வர வேண்டும். இதனால் உற்பத்தி அதிகமாக உள்ள காலங்களில் தக்காளியை பதப்படுத்தி விவசாயிகளுக்கு ஏற்படுகின்ற நஷ்டத்தையும் தவிர்க்க முடியும். மேலும் தக்காளி பதப்படுத்தும் தொழிற்சாலை அமைவதால் வேலை வாய்ப்புகளும் ஏற்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

குப்பையில் கொட்டப்பட்டுள்ள தக்காளி அழுகி கடும் துர்நாற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் உடுமலை சந்தைக்கு காய்கறிகள் வாங்குவதற்காக வருகின்ற பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சந்தை பகுதியில் வீணாகும் காய்கறி கழிவுகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story