கள்ளச்சாவியை போட்டபோது ஒலி எழுப்பியதால் மோட்டார் சைக்கிளை திருட சென்ற ஆசாமி தப்பி ஓட்டம்
கள்ளச்சாவி போட்டு மோட்டார் சைக்கிளை மர்ம ஆசாமி திருட முயன்றபோது, அந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பாதுகாப்பு ஒலி எழுப்பியதால், அந்த ஆசாமி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
குன்னத்தூர்,
குன்னத்தூர் அருகே உள்ள செங்கப்பள்ளியை சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 36). இவர் திருப்பூரில் உள்ள ஒரு இருசக்கர வாகன நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்புவார். இவருடைய மோட்டார் சைக்கிளில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவருடைய மோட்டார் சைக்கிளை இவரை தவிர மற்றவர்கள் தொட்டால்கூட அதில் இருந்து ஒலி எழும்.
சம்பவத்தன்று இரவு இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு, வீட்டிற்குள் தூங்கினார். மறுநாள் அதிகாலை 2 மணிக்கு வீட்டிற்கு முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து திடீரென்று ஒலி வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிவானந்தம் படுக்கையில் இருந்து திடுக்கிட்டு எழுந்து, கதவை திறந்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தார். அப்போது ஒரு ஆசாமி, அங்கிருந்து ஓட்டம் பிடித்து, ஏற்கனவே மற்றொருவர் தயார் நிலையில் வைத்திருந்த மோட்டார்சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டார்.
மோட்டார் சைக்கிளை மர்ம ஆசாமி கள்ளச்சாவி போட்டு திருட முயன்றபோது, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டு இருந்த பாதுகாப்பு அம்சம் செயல்பட தொடங்கியதும், அது தானாக ஒலியை எழுப்பியது. இதனால் பயந்துபோன அந்த ஆசாமி, தப்பித்தால் போதும் என்று, அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இந்த காட்சி அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அது மட்டுமின்றி மோட்டார் சைக்கிளை அந்த ஆசாமி கள்ளச்சாவி போட்டு திருட முயற்சிப்பது முதல் தப்பி ஓடும் காட்சி வரை வாட்ஸ்–அப்பில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.