அடிப்படை வசதியில்லா பாசஞ்சர் ரெயில்கள்


அடிப்படை வசதியில்லா பாசஞ்சர் ரெயில்கள்
x
தினத்தந்தி 16 Sep 2018 10:00 PM GMT (Updated: 16 Sep 2018 8:39 PM GMT)

மானாமதுரை–மன்னார்குடி மற்றும் விருதுநகர்–திருச்சி பாசஞ்சர் ரெயில்களில் அடிப்படை வசதியில்லாததால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

சிவகங்கை, 

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை, கல்லல் உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் உள்ளன. இதில் மானாமதுரை மற்றும் காரைக்குடி ரெயில் நிலையம் ஜங்‌ஷன் அந்தஸ்து பெற்ற ரெயில் நிலையமாக விளங்கி வருகிறது. இந்த ரெயில் தடத்தில் தினசரி பாசஞ்சர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், வாராந்திர ரெயில்கள் சென்று வருகின்றன. அதிலும் மானாமதுரை ரெயில் நிலையம் இணைப்பு ரெயில் நிலையமாக இருக்கிறது. இந்த ரெயில் நிலையத்தில் இருந்து விருதுநகர், நெல்லை, ராமேசுவரம், ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல விரும்பும் பயணிகள் இந்த ரெயில் நிலையத்தை மாற்று ரெயில் நிலையமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் இந்த வழித்தடத்தில் மானாமதுரை–மன்னார்குடி மற்றும் விருதுநகர்–திருச்சி ஆகிய 2 பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த 2 ரெயில்களிலும் எவ்வித வசதிகளும் இல்லாததால் அதில் பயணம் செய்யும் பயணிகள் மிகவும் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

குறிப்பாக மானாமதுரை–மன்னார்குடி பாசஞ்சர் ரெயில் குறைந்த பெட்டிகளுடன் இயங்கி வருகிறது. இந்த ரெயில் மானாமதுரையில் புறப்பட்டு சிவகங்கை, கல்லல், காரைக்குடி, திருச்சி வழியாக மன்னார்குடியை சென்றடைகிறது. இந்த ரெயிலில் அடிப்படை வசதிகளான கழிப்பறை வசதி, மின்விளக்கு வசதி, மின்விசிறி ஆகிய வசதிகள் இல்லாமல் உள்ளதால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த ரெயில் பெட்டிகளில் உள்ள மின்விளக்குகள் சரிவர எரியாமல் உள்ளது. இதேபோல் இந்த பெட்டிகளில் உள்ள மின்விசிறியும் சரிவர செயல்படாததால் பயணிகள் வெயில் நேரத்தில் புழுக்கத்தில் தவிக்கின்றனர்.

இந்த ரெயில் மானாமதுரையில் இருந்து புறப்பட்டு, குறைந்தது 5 மணி நேரம் கழித்து தான் மன்னார்குடி செல்ல முடியும். அதுவரை பெண்கள் மற்றும் குழந்தைகள் கழிப்பறை வசதியில்லாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே தென்னக ரெயில்வே அதிகாரிகள் இந்த ரெயில்களில் செயல்படாமல் உள்ள மின்விசிறி மற்றும் மின்விளக்குகளை சரி செய்ய வேண்டும். அதேபோல் அனைத்து பெட்டிகளிலும் கழிப்பறை வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story