ரெங்கநாதபுரத்தில் ரூ.3 கோடியில் புதிய துணை மின்நிலையம் திறப்பு


ரெங்கநாதபுரத்தில் ரூ.3 கோடியில் புதிய துணை மின்நிலையம் திறப்பு
x
தினத்தந்தி 16 Sep 2018 10:22 PM GMT (Updated: 16 Sep 2018 10:22 PM GMT)

ரெங்கநாதபுரத்தில் ரூ.3½ கோடி மதிப்பீட்டில் புதிதாக துணை மின் நிலையம் திறக்கப்பட்டது.

கரூர்,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் ரெங்கநாதபுரம் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு, ஆண்டிசெட்டிபாளையம் மற்றும் புகளூர் பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் இருந்துதான் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. அதனால் ரெங்கநாதபுரத்தை சுற்றியுள்ள நெடுங்கூர், அத்திபாளையம், கே.பாளையம், வேலம்பாளையம், முன்னூர், மோளபாளையம், க.பரமத்தி, காங்கேயம்பாளையம் மற்றும் புதுக்கநல்லி ஆகிய பகுதிகளில் அடிக்கடி குறைந்த மின் அழுத்தம் நிலவியது. அதனால் விவசாய மோட்டார்களும், குடிநீர் பயன்பாட்டில் உள்ள மோட்டார்களும் அடிக்கடி பழுதடையும் நிலை ஏற்பட்டது.

இதனை சரிசெய்யக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததன் பேரில், ரெங்கநாதபுரத்தில் புதிய துணை மின் நிலையம் அமைக்க தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். அதனடிப்படையில் ரெங்கநாதபுரத்தில் ரூ.3 கோடியே 62 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய துணை மின்நிலையத்தினை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த துணை மின்நிலையத்தின் மூலம் 15 கிராமங்களும், அதனை சுற்றியுள்ள 70 குக்கிராமங்களும் பயன்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தாந்தோன்றிமலையில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் ஆயுதப்படை நிர்வாக தலைமை அலுவலக கட்டிடம் ரூ.3 கோடியே 78 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறை, காவல் துணை கண்காணிப்பாளர் அறை, கலந்தாய்வுக்கூடம், ஆயுத வைப்பறை, உடற்பயிற்சி கூடம், முடி திருத்தகம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த கட்டிடமும் காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சரால் திறக்கப்பட்டது. இதனை மாவட்ட கலெக்டர் அன்பழகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) திஷா மித்தல், கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. கீதா, மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் ஆகியோர் பார்வையிட்டு குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், தமிழ்நாடு மின்சார மேற்பார்வை பொறியாளர் விநோதன், செயற்பொறியாளர்கள் சிவக்குமார், செந்தாமரை, உதவி செயற்பொறியாளர்கள் ஜெகதீசன், மூர்த்தி, சரவணப்பெருமாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Next Story