சேலத்தில் சர்வதேச மாநாடு: பிசியோதெரபி துறையை மாணவர்கள் தேர்வு செய்து படிக்க வேண்டும்


சேலத்தில் சர்வதேச மாநாடு: பிசியோதெரபி துறையை மாணவர்கள் தேர்வு செய்து படிக்க வேண்டும்
x
தினத்தந்தி 16 Sep 2018 10:47 PM GMT (Updated: 16 Sep 2018 10:47 PM GMT)

பிசியோதெரபி துறையை தேர்வு செய்து மாணவர்கள் படித்து முன்னேற வேண்டும், என்று சேலத்தில் நடந்த சர்வதேச பிசியோதெரபி மாநாட்டில் கலந்து கொண்ட மலேசியா நாட்டின் பினாங்கு மாகாண துணை முதல்-மந்திரி ராமசாமி பழனிசாமி கூறினார்.

சேலம்,

இந்திய பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சேலம் கிளை மற்றும் விநாயகா மிஷன்ஸ் பிசியோதெரபி கல்லூரி சார்பில் சர்வதேச பிசியோதெரபி மாநாடு சேலம் விநாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. மாநாட்டுக்கு சேலம் விநாயகா மிஷன்ஸ் நிகர் நிலைப் பல்கலைக்கழக இணை வேந்தர் டத்தோ டாக்டர் எஸ்.சரவணன் தலைமை தாங்கினார்.

மாநாடு செயலாளர் டாக்டர் செந்தில்குமார் வரவேற்றார். இந்திய பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கத்தின் அகில இந்திய தலைவர் டாக்டர் கே.சஞ்சீவ்ஜா, மாநாடு தலைவர் ராஜன் சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மலேசியா நாட்டின் பினாங்கு மாகாண துணை முதல்- மந்திரி ராமசாமி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

எனது சொந்த மாநிலம் தமிழகம் என்பதால் இங்கு வருவதற்கு பெருமையாக இருக்கிறது. காவிரி நீருக்காக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு இடையே எவ்வளவோ பிரச்சினைகள் நடந்தாலும், தற்போது காவிரி நீர் அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது. தண்ணீருக்காக பிரச்சினை நடப்பது வேதனையாக உள்ளது.

தமிழகம் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு என்ன வளர்ச்சியில் இருந்ததோ? தற்போதும் அதே நிலையில் தான் உள்ளது. எல்லா நாடுகளிலும் வேறு வேறு அரசியல் இருந்தாலும், தமிழகத்தில் தான் அதிகமாக அரசியல் உள்ளது. தமிழகத்தில் சில இடங்கள் பசுமையாகவும், சில மாவட்டங்கள் வறட்சியாகவும் காணப்படுகிறது. சரியாக திட்டமிடுதல் இல்லாததே வறட்சிக்கு காரணம்.

இந்தியா பல்வேறு நிலைகளில் முன்னேறி வந்தாலும், இன்னமும் சில கிராமங்களில் வறட்சி மற்றும் வறுமை நிலை மிக மோசமான நிலையில் உள்ளது. இதை போக்க படித்த இளைஞர்கள் சமூக அக்கறையோடு செயல்பட வேண்டும். தற்போது நேரடியாக மருத்துவம் படித்தவர்கள் கூட வேலையில்லாமல் உள்ளனர். பிசியோதெரபி துறையானது மிகவும் முக்கியமான துறையாகும். இதை தேர்வு செய்து மாணவர்கள் படித்து முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மாநாட்டில், போலி டாக்டர்கள் மற்றும் போலி பிசியோதெரபி கல்லூரிகளை தடை செய்ய வேண்டும். வலி நிவாரண மருந்துகள் தடை செய்யப்பட்டு உள்ள நிலையில், பொதுமக்களின் நலன்கருதி ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மாவட்ட மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் புதிய பிசியோதெரபி மருத்துவர்கள் பணியிடம் உருவாக்கி பணி நியமனம் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில் பிசியோதெரபி டாக்டர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story