ஊத்தங்கரை பகுதியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு


ஊத்தங்கரை பகுதியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 17 Sept 2018 4:51 AM IST (Updated: 17 Sept 2018 4:51 AM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரை பகுதியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஊத்தங்கரை,

ஊத்தங்கரை பகுதி யில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வகையான பணிகள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விளக்கி கூறினர். குடிநீர், டெங்கு, தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து ஊத்தங்கரை வேளாண்மைத்துறை சார்பில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஆண்டியூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிக்கு ரூ.75 ஆயிரம் மானிய விலையில் பவர்டிரில்லர் கருவியை கலெக்டர் வழங்கினார். அப்போது வேளாண்மை அலுவலர் பிரபாவதி, வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) கலா, உதவி வேளாண் அலுவலர் தமிழ்வாணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து ஊத்தங்கரை பஸ் நிலையம் அருகில் உள்ள பரசனேரியை கலெக்டர் பார்வையிட்டு ஏரியை தூர்வாரி பராமரிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஊத்தங்கரையில் கட்டப்பட்டுள்ள எரிவாயு தகன மேடையை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஊத்தங்கரை பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது தாசில்தார் மாரிமுத்து, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜீஜாபாய், வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வே.சந்திரசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகம், பேரூராட்சி செயல் அலுவலர் மலர்மாறன், கிராம ஊராட்சி வேடியப்பன், கல்லாவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் நாகராஜ் மற்றும் தேவேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story