பள்ளிபாளையத்தில் 240 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா பங்கேற்பு


பள்ளிபாளையத்தில் 240 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா பங்கேற்பு
x
தினத்தந்தி 16 Sep 2018 11:38 PM GMT (Updated: 16 Sep 2018 11:38 PM GMT)

பள்ளிபாளையத்தில் 240 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பள்ளிபாளையம்,

நாமக்கல் மாவட்டம் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி பள்ளிபாளையம் ஜி.வி. மஹாலில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.செல்வக்குமார சின்னையன், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சமூக நலத்துறையின் சார்பில் ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற தலைப்பிலான பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான மாபெரும் கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் தங்கமணி, சரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதன்பிறகு 240 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர்கள் இருவரும் பரிசு பொருட்கள் வழங்கி அவர்களை வாழ்த்தினார்கள்.

விழாவில் அமைச்சர் தங்கமணி பேசும் போது, பெண்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்காக பல நலத்திட்டங்களை உருவாக்கி இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. தாய்மார்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் சாதி, மத பாகுபாடு இன்றி சமுதாய வளைகாப்பு திட்டம் நடைபெற்று வருகிறது. கொக்கரையன்பேட்டையில் அரசு மருத்துவமனைக்கு எனது சட்டமன்ற நிதியில் இருந்து ரூ.75 லட்சம் ஒதுக்கி புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது என்றார்.

நிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் வெ.சரோஜா பேசும் போது, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் முதன்முதலாக 2012-ம் ஆண்டில் சமுதாய வளைகாப்பு திட்டம் தொடங்கப்பட்டது. அரசின் சமுதாய வளைகாப்பு திட்டத்தின் மூலம் இன்று வரை ரூ.11.23 கோடி நிதி ஒதுக்கீட்டில் 6 லட்சம் கர்ப்பிணிகள் பயன் அடைந்து உள்ளனர். இந்த ஆண்டில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் 1,982 பகுதிகளில் ஒரே நாளில் 71 ஆயிரத்து 280 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு உள்ளது என்றார்.

விழாவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் எஸ்.பத்மாவதி, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் வெ.பாஸ்கரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் டி.கே.சுப்பிரமணி;, பள்ளிபாளையம் முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் எஸ்.செந்தில், பள்ளிபாளையம் முன்னாள் நகர்மன்ற தலைவர் பி.எஸ்.வெள்ளியங்கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story