ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்வதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை
ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்வதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு கூறினார்.
நாகர்கோவில்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு நேற்று நாகர்கோவில் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புழல் ஜெயிலில் கைதிகளின் அறைக்கு போலீசாரின் உதவி இல்லாமல் டி.வி.க்கள் கொண்டு செல்ல முடியாது. எனவே இதில் சம்பந்தப்பட்ட அனைத்து போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதிலும் ஜெயில்களில் போலீசார் தற்போது சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் இந்த சோதனை காலம் கடந்து நடத்தப்படுகிறது. தமிழகத்தில் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால் மின்சார தட்டுப்பாட்டை போக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின்சார வாரியத்தை தனியார் மயமாக்க அரசு முயற்சி செய்து வருகிறது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் அமைச்சரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 27 ஆண்டுகளாக ஜெயிலில் இருக்கும் அவர்களை விடுதலை செய்வதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை. எனவே அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.
தமிழக அமைச்சர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எச்.ராஜா உள்ளிட்ட பா.ஜனதாவினர் வரைமுறையில்லாமல் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லை. நாகர்கோவிலில் தற்போது 20 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வழங்கப்படுகிறது. மக்களுக்கான அடிப்படை வசதிகள் பற்றி அரசு கவலைப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story