‘நீரா’ பானம் இறக்குவதற்காக தென்னை மரங்கள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்


‘நீரா’ பானம் இறக்குவதற்காக தென்னை மரங்கள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
x
தினத்தந்தி 16 Sep 2018 9:45 PM GMT (Updated: 17 Sep 2018 12:13 AM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் ‘நீரா’ பானம் இறக்குவதற்காக தென்னை மரங்களை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்குகிறது.

திண்டுக்கல், 


திண்டுக்கல் மாவட்டத்தில் 30 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் போதிய மழை இல்லாததால் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் பட்டுபோனது. மேலும், தேங்காய் கொப்பரைக்கும் போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

இதற்கிடையே, தென்னை விவசாயிகளின் வருமானத்தை 3 மடங்கு உயர்த்தும் நோக்கில் ‘நீரா’ பானம் இறக்க அனுமதி அளித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு உத்தரவிட்டது. அப்போது, ‘நீரா’ பானம் இறக்க பல்வேறு விதிமுறைகளையும் வெளியிட்டிருந்தது. அதன்படி, தென்னை விவசாயிகள் சேர்ந்து ஒரு உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்கி பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னரே உரிமம் வழங்கப்படும்.

உரிமம் பெற்ற நிறுவனத்தை சேர்ந்த விவசாயிகளின் மொத்த மர எண்ணிக்கையில் 5 சதவீத மரங்களிலேயே ‘நீரா’ இறக்க அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், வத்தலக்குண்டு பகுதிகளை சேர்ந்த 1,000 விவசாயிகள் சேர்ந்து தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்தை தொடங்கி ‘நீரா’ இறக்க விண்ணப்பித்துள்ளனர்.

இதையொட்டி, அந்த விவசாயிகளுக்கு சொந்தமாக நிலக்கோட்டை, பழனி, ஆத்தூர், ஒட்டன்சத்திரம் வட்டாரங்களில் உள்ள தென்னை மரங்களை கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, தாசில்தார், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வேளாண் வணிகத்துறை உதவி அலுவலர் ஆகியோர் அடங்கிய மதிப்பீட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் இன்று (திங்கட்கிழமை) முதல் தென்னை மரங்களை கணக்கெடுக்க உள்ளனர். கணக்கெடுப்பு பணிகள் முடிந்தவுடன் கலால் துறையிடம் அறிக்கை அளிக்கப்படும். அந்த அறிக்கையின் அடிப்படையில் ‘நீரா’ இறக்க கலெக்டர் உரிமம் வழங்குவார் என்று வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் சாத்தப்பன் தெரிவித்துள்ளார். 

Next Story