வால்பாறையில் குடியிருப்புகளில் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்


வால்பாறையில் குடியிருப்புகளில் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 17 Sep 2018 10:15 PM GMT (Updated: 17 Sep 2018 1:19 PM GMT)

வால்பாறையில் குடியிருப்புகளில் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. மளிகைக்கடை சுவரை இடித்துத்தள்ளி பொருட்களை அள்ளி வீசின.

வால்பாறை,

வால்பாறை பகுதியில் கடந்த மாதம் 26–ந் தேதி முதல் காட்டுயானைகள் எஸ்டேட் பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக சிங்கோனா, முடீஸ் சுற்றுவட்டார பகுதிகள், பன்னிமேடு, கல்யாணபந்தல் உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் பன்னிமேடு எஸ்டேட் முதல் பிரிவு குடியிருப்புக்குள் புகுந்த காட்டுயானைகள் கூட்டம் காளியம்மா, சகுந்தலா, மாடசாமி, ராமதாஸ் ஆகியோரது வீடுகளின் கதவு ஜன்னல்களை உடைத்து அட்டகாசம் செய்தனர். துதிக்கையை உள்ளே விட்டு வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்தியது. இதில் சகுந்தலா என்ற தொழிலாளியின் வீட்டிலிருந்த பொருட்கள் முழுவதையும் எடுத்து வெளியெ வீசி எறிந்து சேதப்படுத்தியது. இதற்கிடையில் பன்னிமேடு எஸ்டேட் குடியிருப்புக்குள் காட்டுயானைகள் நுழைந்துள்ளதை வனத்துறைக்கு தெரிவிப்பதற்கு அந்த பகுதியில் செல்போன் சேவை கிடைக்கவில்லை.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், இந்த பகுதியில் எப்போதுமே செல்போன்சேவை கிடைப்பதில்லை என்றும் இதனால் நாங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுவருகிறோம். மேலும் பட்டபகலிலேயே குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால், அவைகள் அடிக்கடி வருகின்ற நிலை உள்ளது. ஆகவே அவற்றை விரட்டுவதற்காக பகல் நேரத்திலேயே குடியிருப்புகளுக்கு அருகில் தீமூட்டி வைக்கவேண்டியுள்ளது என்றனர். இதே போல கல்யாணபந்தல் எஸ்டேட் பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த காட்டுயானைகள் சித்தர்ராஜ் என்பவரின் மளிகைக்கடை சுவரை இடித்து தள்ளியதோடு, உள்ளிருந்த பொருட்களை எடுத்து சாப்பிட்டு வெளியே அள்ளி வீசின. மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால் காட்டுயானைகள் பல்வேறு கூட்டங்களாக பிரிந்து சுற்றித்திரிந்து வருவதால் வனத்துறையினரும் யானைகளை கண்காணிக்கும் பணியை மேற்கொள்வதில் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர்.


Next Story