அறச்சலூர் அருகே தண்ணீர் தேடி வழி தவறி வந்த புள்ளிமானை நாய்கள் துரத்தின


அறச்சலூர் அருகே தண்ணீர் தேடி வழி தவறி வந்த புள்ளிமானை நாய்கள் துரத்தின
x
தினத்தந்தி 17 Sep 2018 10:00 PM GMT (Updated: 17 Sep 2018 2:10 PM GMT)

அறச்சலூர் அருகே தண்ணீர் தேடி வழி தவறி வந்த புள்ளிமானை நாய்கள் துரத்தின. அதை பொதுமக்கள் மீட்டு காட்டுக்குள் விட்டனர்.

அறச்சலூர்,

அறச்சலூர் அருகே உள்ள நாகமலை காப்புக்காட்டில் ஏராளமான மான்கள் மயில், குரங்குகள் உள்ளன. 450 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த காப்புக்காட்டில் தற்போது தண்ணீர் வசதி இல்லை. இதனால் மான்கள் அடிக்கடி தண்ணீரை தேடி அறச்சலூர் மற்றும் அருகே உள்ள திருவள்ளுவர் நகர் பகுதிக்கு வந்து விடுகின்றன. அவ்வாறு வரும் மான்களை தெருநாய்கள் கடித்து குதறிவிடுகின்றன. சில நேரங்களில் குடியிருப்பு பகுதிக்கு வரும் மான்களை பொதுமக்கள் பார்த்து காட்டுக்குள் விரட்டிவிடுவார்கள்.

இந்த நிலையில், நேற்று காலை 9 மணி அளவில் காப்புக்காட்டில் இருந்து ஒரு புள்ளிமான் தண்ணீரை தேடி வெளியேறியது. அப்போது அது வழி தவறி திருவள்ளுவர் நகர் பகுதிக்குள் நுழைந்தது.

திருவள்ளுவர் நகரில் தெருவில் சுற்றிய புள்ளிமானை நாய்கள் பார்த்து குரைத்தன. சிறிது நேரத்தில் அந்த பகுதி நாய்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கடிக்க துரத்தின. இதைப்பார்த்த பொதுமக்கள் ஓடிச்சென்று நாய்களை விரட்டினார்கள். பிறகு மானை மீட்டு மீண்டும் நாகமலை காப்புக்காட்டுக்குள் கொண்டுசென்று விட்டனர்.

தண்ணீரை தேடி அடிக்கடி மான்கள் காட்டைவிட்டு வெளியேறி விடுகின்றன. இதுவரை பல மான்கள் நாய்களால் கடிபட்டு இறந்துள்ளன. அதனால் வனத்துறையினர் காப்புக்காட்டை சுற்றி இரும்பு கம்பி வேலி அமைக்கவேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.


Next Story