ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மனு கொடுக்கும்படி பொதுமக்களை தொந்தரவு செய்கிறார்களா?
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மனு கொடுக்கும்படி பொதுமக்களை தொந்தரவு செய்வதாக புகார் வந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்தது. அந்த குழு கடந்த வாரம் தூத்துக்குடிக்கு வருவதாக இருந்தது. சில காரணங்களால் அந்த குழு வருகை ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு அந்த குழு எப்போது வரும் என்ற விவரம் வரவில்லை. மற்றபடி ஸ்டெர்லைட் ஆலை முற்றிலும் சீல் வைக்கப்பட்டு உள்ளது. ஆலையில் ராக்பாஸ்பேட், ஜிப்சம் உள்ளிட்ட ரசாயன பொருட்கள் அதிக அளவில் உள்ளது. அதுதொடர்பாக அரசு உத்தரவின் பேரில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மனு கொடுப்பதற்காக ஆலை ஊழியர்கள் சிலர், பொதுமக்களை அணுகுவதாக புகார்கள் வந்தன. ஆனால் இதுவரை பொதுமக்களிடம் இருந்து தங்களை தொந்தரவு செய்கிறார்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்குகிறார்கள் என்ற புகார்கள் எதுவும் வரவில்லை. அதுபோன்ற புகார்கள் எதுவும் வந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் சட்ட விதிமுறைகளுக்கு எதிராக சென்றாலோ, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கினாலோ நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை அதுபோன்று எதுவும் நடக்கவில்லை. ஆனாலும் ஆலை தரப்பினரை அழைத்து, தூத்துக்குடியில் இயல்பான நிலை திரும்பி உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தக்கூடாது என்று அறிவுரை வழங்குவோம்.
தூத்துக்குடி வி.வி.டி.சிக்னலில் மேம்பாலம் அமைப்பதற்கு இதுவரை அரசு தரப்பில் மேற்கொள்ள வேண்டிய எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, பணிகள் தொடங்கும் நிலையில் இருந்தது. அப்போது, 3 பேர் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனு தள்ளுபடியானது. அவர்கள் மேல்முறையீடு செய்து இருக்கிறார்கள். அந்த மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளோம். அதே போன்று அரசு தரப்பில் கருத்துரு பெற்று மேம்பாலத்துக்கான மற்ற பணிகளை தொடங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும். தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தூத்துக்குடி பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம் மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி 1-வது ரெயில்வே கேட்டில் சுரங்கப்பாதையும், 2-வது ரெயில்வே கேட்டில் மேம்பாலமும் அமைக்கப்பட உள்ளது. இதன் முக்கியத்துவம் குறித்து வியாபாரிகளுக்கு விளக்கப்படும். பொதுமக்கள் பாதுகாப்புக்காக இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகத்தில் இருந்து வலுவான பரிந்துரை வந்து உள்ளது. ஏதேனும் எதிர்ப்பு இருந்தால் மக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவோம்.
தூத்துக்குடியில் ஆம்னி பஸ் நிலையம் அமைப்பதற்காக தனியாக இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்திய உணவுக்கழக குடோன் முதல் திருச்செந்தூர் ரவுண்டானா வரை சாலை புதுப்பிக்கப்பட உள்ளது. அப்போது, உயர்மின்கோபுர விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முதல் விமான நிலையம் வரை மின்விளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சியில் முக்கிய இடங்களில் மின்விளக்குகள் அமைக்கப்படுகிறது.
ஓட்டப்பிடாரம் அருகே கப்பிக்குளத்தில் 30 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக தகவல்கள் வந்தன. அதன்பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பரிசோதனை செய்தனர். ரத்த மாதிரிகள் சேகரித்து சோதனை செய்தனர். இதில் 2 பேருக்கு மட்டும் டைபாய்டு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. மற்றபடி டெங்கு, சிக்கன்குனியா போன்ற எந்த காய்ச்சலுக்கான அறிகுறிகளும் தென்படவில்லை. இதனால் குடிநீர் குழாய்களை சுத்தம் செய்தல், கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்கு காய்ச்சலில் ஒருவர் இறந்ததாக தகவல் வந்தது. அவர் காய்ச்சலால் இறக்கவில்லை. அவருக்கு நீரிழிவு நோய் உள்ளிட்ட சில பிரச்சினைகளும் இருந்து உள்ளன. ஆனாலும் அங்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்காக தூத்துக்குடி சுகாதார பணிகள் இணை இயக்குனர் தலைமையில் ஆய்வு நடந்து வருகிறது. ஆய்வு அறிக்கை வந்த பிறகு ஏதேனும் தவறு நடந்து இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கல்லாமொழி கடலோரத்தில் நிலக்கரி இறங்குதளம் அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இது மின்சார பாதுகாப்பு மற்றும் உற்பத்திக்கான முக்கியமான திட்டம். இதனால் ஏற்கனவே மீனவர்களுடன் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தி, எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று தெரிவித்து உள்ளோம். தேவைப்பட்டால் மீண்டும் அவர்களை அழைத்து பேசி, அவர்களின் குறைபாடுகளை களைய முயற்சி செய்யப்படும்.
தாமிரபரணி புஷ்கரவிழாவையொட்டி, விழா நடைபெறும் பகுதிகளில் குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
Related Tags :
Next Story