பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; போலீஸ்காரர் பரிதாப சாவு


பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; போலீஸ்காரர் பரிதாப சாவு
x
தினத்தந்தி 17 Sep 2018 9:45 PM GMT (Updated: 17 Sep 2018 6:02 PM GMT)

கோவில்பட்டி அருகே பஸ்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் போலீஸ்காரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவில்பட்டி, 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே செமபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையா. இவருடைய மகன் செல்லத்துரை (வயது 28). இவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வீரராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார்.

நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் செல்லத்துரை தனது மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டிக்கு புறப்பட்டு சென்றார். கோவில்பட்டியை அடுத்த பாண்டவர்மங்கலம் பகுதியில் சென்றபோது, எதிரே கோவில்பட்டியில் இருந்து கப்பிகுளம் வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட செல்லத்துரை பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே செல்லத்துரை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து, பஸ் டிரைவரான கயத்தாறைச் சேர்ந்த முத்தையா மகன் மற்றொரு செல்லத்துரையை (42) கைது செய்தார். விபத்தில் இறந்த செல்லத்துரைக்கு சுகபிரியா (25) என்ற மனைவியும், ரஞ்சனா (3½) என்ற மகளும் உள்ளனர். 

Next Story