ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் கலெக்டரிடம் விவசாய சங்கத்தினர் மனு
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டரிடம் விவசாய சங்கத்தினர் மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது ஆத்தூர் குளம் கஸ்பா அனைத்து விவசாயிகள் அபிவிருத்தி நலச்சங்கம், தாமிரபரணி தென்கால் நத்தைக்குளம் நீரினை பயன்படுத்துவோர் சங்கம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி பாசன விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் சுமார் 300 பேர் கூட்டமாக வந்து கலெக்டர் சந்தீப்நந்தூரியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
எங்கள் பகுதி விவசாய பகுதி ஆகும். எங்கள் விவசாயத்துக்கு பிரதான உரமாகிய டி.ஏ.பி. உரம் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் ஸ்டெர்லைட் ஆலை இயங்காதது தான். உர தொழிற்சாலைகளுக்கு கிடைக்க வேண்டிய சல்பியூரிக் ஆசிட், பாஸ்பாரிக் ஆசிட் ஆகியவை கிடைக்கவில்லை. உரம் தட்டுப்பாடுக்கு ஸ்டெர்லைட் ஆலை மூடியது ஒரு காரணம்.
மேலும் ஸ்டெர்லைட் நிறுவனம், எங்கள் விவசாயத்துக்கு வசதியாக கால்வாய் சுத்தம் செய்தல், குளம் தூர்வாருதல், வண்டல் மண் அடித்து கொடுத்தல் மற்றும் நிறைய பராமரிப்பு பணிகள் பல கோடி ரூபாயில் செய்து தருகிறார்கள். எங்கள் பகுதி இளைஞர்கள் பலர் ஸ்டெர்லைட் ஆலைக்கு வேலைக்கு சென்றனர். இப்போது அவர்கள் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். இப்படி பல கஷ்டங்களில் இருக்கும் எங்களுக்கு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்து நடத்துவதற்கு ஆவன செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதேபோல் இடையர்காடு பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கொடுத்த மனுவில், ‘விவசாயிகளான நாங்கள் வறுமையில் வாடிக்கொண்டு இருக்கிறோம். வடிகால் சரியில்லாததால் பல கஷ்டங்களை அனுபவித்து வந்தோம். வாழவெட்டி, கலுங்கு ஓடை தூர்வாராமல் இருப்பதால் மாரமங்கலம், இருவப்பபுரம், அகரம், மஞ்சல்நீர்காயல் பகுதிகளில் நஞ்சை நிலங்களில் மழை காலத்தில் தண்ணீர் வடியாமல் பயிர்கள் அழிந்து விடுகின்றன. தற்சமயம் ஸ்டெர்லைட் ஆலையை அணுகி கலுங்கு வடிகால் ஓடையை தூர்வாரினோம். அவர்கள் இதற்காக ரூ.10 லட்சம் செலவு செய்தனர். ஆலை மூடப்பட்டாலும் அவர்கள் எங்களுக்கு உதவி செய்தனர். அதேபோல் நமது மாவட்டத்தில் பல நன்மைகள் செய்து வருகிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு இன்முகத்துடன் தொண்டு செய்யும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story