விவசாய நிலங்களில் காட்டு யானைகள் அட்டகாசம்
தென்காசி அருகே உள்ள வடகரையில் விவசாய நிலங்களில் காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன. இதனால் அங்கு பயிரிடப்பட்டிருந்த ஒரு ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்தன.
தென்காசி,
தென்காசி அருகே உள்ள வடகரை, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு விவசாயிகள் நெல், தென்னை, வாழை போன்றவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்கள். நீண்ட காலமாக காட்டு யானைகள் இரவில் இங்கு வந்து இந்த பயிர்களை அழித்து வருவது வாடிக்கையாகி விட்டது. இதனால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களாகவே யானைக்கூட்டம் இங்குள்ள வாழை, தென்னை மரங்களை அழித்து வந்தன. வடகரையில் இருந்து அடவி நயினார் அணைக்கு செல்லும் சாலையில் மேட்டுக்கால் பகுதியில் செம்போடை என்ற இடத்தில் இதே ஊரை சேர்ந்த உமரத்தா, சாகுல் ஹமீது ஆகியோருக்கு சொந்தமான விவசாய நிலங்கள் உள்ளன. இதில் நெற்பயிர்கள் பயிரிட்டு இருந்தனர். பயிர் கதிர்களுடன் வளர்ந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 4 காட்டு யானைகள் அங்கு புகுந்தன.
அந்த காட்டு யானைகள், அங்கு பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை பிடுங்கி தின்றுள்ளன. மேலும் காலால் மிதித்தும் பயிர்களை சேதப்படுத்தி உள்ளன. நேற்று காலை வரை யானைகள் அங்கு இருந்தே பயிர்களை நாசம் செய்துள்ளன. இந்த வயலின் எதிர்புறம் மன வளர்ச்சி குன்றியோருக்கான ஆசிரமம் உள்ளது. அங்குள்ள நிர்வாகிகள் இரவு முழுவதும் யானைகளின் சத்தத்தை கேட்டுள்ளனர். இரவில் யாரும் உள்ளே போக முடியாத சூழ்நிலை இருந்தது. எனவே நேற்று காலையில் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்டினர். அதன்பிறகு யானைகள் காட்டுக்குள் சென்று விட்டன. யானைகளின் அட்டகாசத்தால் ஒரு ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது. நீண்ட காலமாக அட்டகாசம் செய்து வரும் யானைகளை கட்டுப்படுத்த வழி தெரியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர். மேலும் நாசமடைந்த பயிர்களுக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும், யானைகளை காட்டுக்குள் விரட்ட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story